

“பாம்பு ஆயிரம்
பனை ஆயிரம்
புளியன் ஆயிரம்
புங்கன் ஆயிரம்”
அப்புச்சி (அம்மாவின் அப்பா) தணிந்த குரலில் பாடியபடியே தழுஞ்சிப் புதர்கள் மண்டிய கிணற்று மேடேறினார். தொளைவாரிக் குழியில் கீழே இறங்கினார். எட்டு வயது சிறுவனான நான் பின்தொடர்ந்தேன். மின்சாரம் வருவதற்கு முன் பாசனத்திற்கு நீர் இறைக்க அப்புச்சி எருதுகள் பூட்டி கபிலை ஏற்றம் பிடித்த தொளைவாரி அது.
தொளைவாரி இறக்கத்தின் கீழே பள்ளத்தில் கிணற்றுவெட்டுக் கருங்கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. அந்தக் கருங்கற்குவியலுக்கு மத்தி யில் நூறு வருட பழமையான முற்றிய புளியமரம் நெடிதுயர்ந்து நிழல் பரப்பி நின்றது.
அப்புச்சி மட்டும் தொளைவாரியில் மேலும் சில அடி தூரம் கீழே நகர்ந்தார். செருப்புக் காலடியில் புளியம்பழ ஓடுகளும் சருகுச் சிற்றிலைகளும் நுணுங்கி ஓசையிட்டன. நான் அப்புச்சியைக் கேட்டேன்.
“ஏனுங்க அப்புச்சி… பிணையல் பாம்புக வருமுல்ல?” “தெனமும் இந்நேரத்துலதான் வந்து ஆடுதுக. இன்னிக்கும் வரும்.” நான் எதிர்பார்ப்புடன் கருங்கற்குவி யலையே உற்றுப் பார்த்தபடி இருந்தேன்.
தோட்டவெளி எங்கும் அலாதி யான நடுப்பகல் நிசப்தம். காற்றடங்கி புளியங்கிளைகளும் அசையவில்லை. திடீரென புளியமர வேரடியில் சருகு களுக்குள் சரசரப்பு ஒலி எழுந்தது. இரு நாகப்பாம்புகள் வெளிப்பட்டுக் கருங்கற்குவியலின் ஊடே ஊர்ந்து வந்தன.
படுகிடைப் பலகைக்கல் ஒன்றின் மீதேறிப்பிணையலிட்டு ஆடின. இருபாம்புகளும் ஒரே சாயலில் இருந்தன. ஆளுயர நீளம். அடிக் கெண்டைக்கால் தடிமன். பிணையல் பாம்புகள் வால்களின் நுனியைப் பலகைக் கல்லில் ஊன்றிப் பிணையலைப் பிரிக்காமல் மேலே நிமிர்ந்து எழுந்தன.