

ஈஸ்வர வருடத்தின் கார்மழையற்ற வறட்சியான கோடைக்காலம். வெக்கை படர்ந்த மானாவாரி நிலத்தில் செடிகொடிகள் சொடுங்கிக் கிடந்தன. தோட்டவெளிகளில் தென்னைகளைத் தவிர எங்கும் பசுமையில்லை. வெயிலில் உறைந்த சிற்றூர்களைத் தனியார் பேருந்து நின்று நின்று மிதவேகத்தில் கடந்துகொண்டிருந்தது.
இரண்டு வாரங்களாக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அப்பா சிகிச்சை பெற்றுவந்தார். அவருடன் தங்கியிருந்த நான், இன்றுதான் ஊருக்குச் சென்று வருவதற்காகப் பின்மதியத்தில் புறப்பட்டேன். அவினாசி வழியாகத் திருப்பூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் படிக்கட்டுகள்வரை ஆள்கள் தொங்கிய நிலையில் கடந்தன.