

யுவ வருடத்தின் ஐப்பசி மாதம். ஆகாயம் அடைமழை இன்றி வெளிவாங்கியிருந்த நாள். உள்ளூர் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கேரளத்தின் முக்கிய இடங்களைப் பார்ப்பதற்காக நான் சுற்றுலா புறப்பட்டேன்.
கார் திருச்சூரைச் சமீபிக்கும்போது தான் எங்களுக்குப் ‘புன்னகை மன்னன்’ அருவியைப் (அதிரப்பள்ளி அருவி) பார்க்கும் எண்ணமே தோன்றியது.
புன்னகை மன்னன் அருவியில் கூட்டம் அதிகம் இல்லை. அப்போதெல்லாம் சோலையாறு மலைத்தொட ரிலிருந்து வரும் சாலக்குடி ஆறு அருவியாக மாறுவதற்கு முன்பான பாறைப் பகுதிவரை செல்ல அனுமதி உண்டு. நாங்கள் நீர்ப்பிரவாகம் அருவியாக மாறிக் கொட்டும் பாறை விளிம்பு ஓரமாக நின்று படம் எடுத்துக்கொண்டிருந்தோம். கீழே அதலபாதாளம். அப்போது அங்கே காவல் பணியில் இருந்தவர் எங்களை நோக்கி வந்தார்.