

ஓவியம்: முத்து
சுபகிருது ஆண்டின் ஆடிக் கோடை நாள். பொழுது விடிந்து வெளிச்சம் பரவிய வேளை. கூடுதுறையும் சங்கமேஸ்வரர் கோயிலும் சனங்களோடு காட்சியளித்தன. ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் எங்கும் ‘காக்க காக்க’ திரைப்படத்தின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
நான் ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே இறங்கி காவிரிக் கரையோரமாக நடந்து கொமாரபாளையத்துக்குள் நுழைந்து தேடினேன். சிறுநீரகத் தரகர் காளியப்பன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீடு சீமைக்கருவேலம் மரங்களுக்கு நடுவே பன்றிகள் உலவும் மண்தடத்தின் ஓரமாகத் தனித்திருந்தது.
ஓலைக்கீற்று வேய்ந்த வீட்டில் ஆள் எவரும் இல்லை. சேவல்கள் கூவித் திரிந்த மண்வாசலில் அமைதியாக நின்றுகொண்டேன். எழுத்தாளர் ச.பாலமுருகனும் தோழர் நிறைமதியும் சிறுநீரகத் தரகர்கள் பற்றிய விவரத்தைத் தந்திருந்தனர். சட்டவிரோதச் சிறுநீரக விற்பனையைத் தனியார் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தும் உத்வேகத்துடன் வந்திருந்தேன்.
காளி யப்பன் ஆற்றில் குளித்துவிட்டு ஈரவேட்டியை உலர்த்தியபடி வந்து சேர்ந்தார். நாற்பது வயதுத் தோற்றம். நான் சந்திக்க வந்த காரணத்தைச் சொன்னேன். அவர் என்னை நம்பவில்லை. “நான் டிவிக்கெல்லாம் பேச வரமாட் டேனுங்க.” “முகத்தையெல்லாம் மறைச்சிரு வோம். “வேண்டாங்க.”
“அப்படியின்னா உங்க மூலம் கிட்னி வித்தவங்களை எனக்கு அறிமுகப் படுத்த முடியுமா?” காளியப்பன் சம்மதித்தார். பெரிய விசைத்தறிப் பட்டறையின் வெளிப் புறத்தில் நின்ற பாட்டியம்மாவைக் கை காட்டிவிட்டு மறைந்துவிட்டார்.