

பருவமழை தொடங்கியிருந்த புரட்டாசியின் முன்னிரவு. நெருங்கிய பங்காளிகள் அனைவரும் எங்கள் தோட்டத்து வீட்டு வெளித்திண்ணையில் கூடியிருந்தனர். இரண்டு தலைக்கட்டாக நின்றுபோயிருந்த குலதெய்வக் கோயில் கிடாவெட்டை நடத்துவது குறித்து விவாதித்தனர்.
மழைக்காலம் முடிந்தபின் கிடாவெட்டை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவாயிற்று. சின்ன அப்பாருவின் (தாத்தா) செம்மறிப் பட்டியில் நேர்த்திக்கடன் வெள்ளாட்டுக் கிடாய் வேகமாக வளர்ந்தது.
மானாவாரி நிலங்களிலும் கரைவெளி வயல்களிலும் பூரணமாக அறுவடை முடிந்த தை மாதக் கடைசி யில் குலதெய்வக் கோயிலுக்கான சவ்வாரி வண்டிப் பயணம் சாத்தியமாயிற்று. வைகறையிலேயே சவ்வாரி வண்டிகள் வரிசையாக ஈசான திசையில் புறப்பட்டன.
அத்தைமார் குடும்பங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களும் சவ்வாரி வண்டியில் வந்து சேர்ந்துகொண்டனர். அந்தி மஞ்சள் வெயில் மங்கும் போது சவ்வாரி வண்டிகள் வெள்ளக்கோவில் கடந்து வள்ளி யரச்சல் போய்ச் சேர்ந்தன.
ஊருக்கு வடப்புறத்தில் தென்னந்தோப்புக்குள் காலப்பழமையான அழகுநாச்சி அம்மன் கோயில் இருந்தது. சவ்வாரி வண்டிகள் அவிழ்த்து விடப்பட்ட பின் சின்ன அப்பாரு என்னைக் கிட்டத்தில் கூப்பிட்டுச் சொன்னார்.
“பேராண்டி... சிட்டாளுகள (சிறுவர் களை) தொணைக்குக் கூட்டிக்கிட்டுத் தெக்கால ஊருக்குள்ள போயி திருவேலைக்காரர வரச் சொல்லுடா.” “திருவேலைக்காரருன்னா?” “குலதெய்வக் கோயில்ல எல்லாக் காரியங்களுக்கும் ஒத்தாசை செய்யற வருடா…” நானும் மற்ற சிறுவர்களும் தெற்கே வள்ளியரச்சலுக்கு ஓடினோம்.
ஊரின் கிழக்குப்புறத்தில் சீமையோட்டுக் கூரை வேய்ந்த சிறிய வீட்டின் சுத்திண்ணையில் திருவேலைக்காரர் உட்கார்ந்திருந்தார். காவி வேட்டி உடுத்தி வெற்றுடம்போடு இருந்தார்.
நெற்றியில் திருநீறு தீட்டி, சந்தனப் பொட்டும் குங்குமமும் வைத்துப் பூசாரியின் தோற்றத்தில் காணப்பட்டார். வீட்டுக்குள்ளிருந்து இக்கத்தில் கைக்குழந்தையை இடுக்கியபடி சிறுவன் ஒருவனோடு திருவேலைக்காரியும் வாசலுக்கு வந்து நின்றார்.