நெட்டையாண்டியின் மாயக்குதிரை! | மயில்கள் அகவும் பெருநிலம் 12

நெட்டையாண்டியின் மாயக்குதிரை! | மயில்கள் அகவும் பெருநிலம் 12

Published on

எனக்கு நினைவு தெரிந்தபோது தோட்டத்தில் ஒரு குதிரை இருந்தது. செம்மை நிறத்தில் பிடரிமயிர்கள் அடர்ந்த பெட்டைக்குதிரை. பெரியப்பா வளர்த்திய குதிரை. எப்போதும் தோட்டத் தின் வடமேற்கு மூலை அருகம்புல் தரிசில் நீளமான கயிற்றினால் கட்டப்பட்டிருக்கும்.

உச்சிவெயில் நேரத்தில் பெரியப்பா ஈயவாளியில் கழுநீர் எடுத்துப் போய் குதிரைக்கு வைப்பது வழக்கம். பள்ளி விடுமுறை நாளாக இருந்தால் நானும் கண்ணப் பண்ணனும் கூடப்போய் குதிரையைத் தொட்டுத் தடவிப் பார்ப்போம். பிடரிமயிரைக் கோதிவிடுவோம்.

பெரியப்பா அருகில் இருக்கும்போது குதிரை படுசாதுவாக நிற்கும். மற்ற நேரத்தில் சிறுவர்களையும் பெண்களையும் கண்டால் கடிக்க ஓடிவரும். பின்னங்கால்களைத் உயர்த்திக் குதியாளமிடும். எவரும் பார்க்கவில்லையெனில் நாங்கள் குதிரையை நோக்கிக் கல்லெறிவோம். பள்ளிக்கூடத்துச் சேக்காளிகளையும் தோட்டத்திற்குக் கூட்டி வந்து குதிரையை வேடிக்கை காட்டுவோம்.

குதிரையை வண்டியில் பூட்டி நான் பார்த்ததில்லை. சேணமும் கடிவாளமும் வண்டிச்சாய்ப்பின் முட்டுக்காலில் வெறுமனே தொங்கின. குதிரை வண்டியும் நூலாம்படையுடன் தூசி படிந்து நின்றது.

வெயில் ஏறிய இளமதியம் ஒன்றில் குதிரை நிற்காமல் கனைத்தது. முன்னங்கால்களால் மண்ணை வாரியபடி மூர்க்கத்துடன் துள்ளியது. அப்பாவோடு புகையிலை வியாபாரத்துக்குப் புறப்பட்ட அப்பாரய்யன் (அப்பாவின் தந்தை) சவ்வாரி வண்டியில் ஏறப்போகிற சமயத்தில் பெரியப்பாவைக் கூப்பிட்டுக் கண்டித்தார்.

“குதிர பலம்பட (சினை பிடிக்க) திரியுது. கயித்தை அத்துக்கிச்சுன்னா எங்காச்சும் ஓடிப்போயிரும். ஏம்ப்பா அதைக் கட்டிவெச்சு கொடுமைப்படுத்தறே? வித்துத் தொலையின் னாலும் கேக்க மாட்டேங்கறே.” பெரியப்பா பதில் பேசாமல் மேற்குத் தோட்டத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in