

அது 1990இன் மழைக்காலம். கருமுகில் கூட்டம் ஆகாயத்து உச்சிப்பொழுதை மூடி மறைத்திருந்தது. கோவில்பாளையத்து நடுவளவிலுள்ள சுப்பிரமணி மாமாவின் வீட்டு வெளி நடைக் கதவைத் தாண்டி உள்நுழைந்தேன்.
தொட்டிக்கட்டு வாசலோரத்துக் கல்லுரல் குழியில் தேங்கியிருந்த மழைநீரை அருந்திக்கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் எழுந்து பறந்தன. சுற்றிலும் மரத்தூண்கள் தாங்கிய காரைத்திண்ணையின் வடக்குப்புறத்தில் நூலகப் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
அவை அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ஊர்மக்கள் வாசிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத் தில் சுப்பிரமணி மாமா எடுத்து வந்திருந்த புத்தகங்கள். நான் முகப்பு அட்டை கிழிந்த சு.ரா.வின் ‘அக்கரைச் சீமையிலே’யும், கு.ப.ரா.வின் ‘புனர்ஜென்ம’மும் எடுத்துக் கொண்டேன். ஊரைக் கடந்து நடந்தபோது மழைத்துளிகள் கனத்து இறங்கி விட்டன.
குழைசேறான மண்பாதையில் புத்தகங்களைச் சட்டையின் உள்ளே மறைத்துக்கொண்டு ஓடினேன். எங்கள் தோட்டத்து வீட்டை அடைந்தபோது என்னோடு சேர்ந்து புத்தகங்களும் நனைந்துவிட்டன. புத்தகங்கள் ஈரம் உலர சூடான அடுப்பங்கரை மண்மேடையின் மீது விரித்து வைத்தேன். அம்மா கேட்டார்.
“இந்தப் பொஸ்தகமெல்லாம் எங்க இருந்துட எடுத்துக்கிட்டு வந்தே?” “சுப்பிரமணி மாமா வீட்டிலி ருந்து.” “நீ பரீச்சைக்குப் படிக்கற வழியப் பாரு. அவரு வெச்சி ருக்கற புத்தகத்தையெல்லாம் படிக்காதே.” “ஏம்மா, உங்களுக்கெல் லாம் அவரைக் கண்டா புடிக்கமாட்டீங்கிது?” “அவரு நல்ல மனுசன்தான்டா. ஆனா, அவரு பேசற பேச்சும் செய்யற காரியமும் அரைக்கிறுக்குத்தனமா இருக்கும்.”