

அனல் கோடை மிகுந்த சித்திரையின் அந்தி. கோவில்பாளையத்துத் தையல்கடைக்குப் போய் மிதிவண்டியை நிறுத்தியபோது, அங்கு இளவட்டங்களின் கூட்டம் திரண்டிருந்தது. நாகராஜ் நடுநாயகமாக உட்கார்ந்து ஏதேதோ சிரிக்கச்சிரிக்கப் பேசியபடி இருந்தார். இறுதியில் எல்லைப்பாளையத்து அய்யனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லத் தொடங்கினார்.
ஊர்பக்கம் பெரிய பஞ்சம் சூழ்ந்திருந்த காலம். சனங்கள் உயிர்வாழ நில ஆவரைக் காய்களைப் பறித்துவந்து, கல்லுரலில் ஆட்டித் தோசை சுட்டுத் தின்றனர். கட்டுத்தரையில் மாடுகளுக்கோ தீனியில்லை. ஊர்க்குடியானவர்கள் மாடுகளைச் சந்தைக்கு ஓட்டிப் போய் அடிமாட்டு விலைக்கு விற்றுக்கொண்டிருந்தனர்.
எல்லைப்பாளை யத்து அய்யனுக்கோ மாடுகளை அழியவிட விருப்பமில்லை. மாட்டுத்தீனி வாங்க பாரவண்டி பூட்டி மேற்குச்சீமைக்குப் பயணப்பட்டார். தாராபுரம் தாண்டி பொன்னாபுரத்தில் கோடைச் சோளத்தட்டு விற்கும் தோட்டத்தைக் கண்டறிந்தார். அந்தத்தோட்டத்துக்காரரோ சோர்ந்து காணப்பட்டார். எல்லைப்பாளையத்து அய்யன் விசாரித்ததில் உடைந்து போய் அழுதார்.
“எனக்கும் பக்கத்துத் தோட்டத்துக் காரனுக்கும் பொளி (வரப்பு) தகராறுங்க. இன்னிக்குப் பக்கத்துத் தோட்டத்துக்காரன் உருவாரப்பூசை செஞ்சு என்னைக் கொல்றதுக்கு மந்திரவாதியைக் கூட்டிக்கிட்டு வந்துட்டானுங்க.” “உருவாரப்பூசையின்னா?” “கம்புமாவுல உருவாரம் செஞ்சு, அந்த உருவாரத்து மேல மந்திரம் ஓதி ஊர்வலமா சுமந்துகிட்டு, ஊரை மூணு சுத்துசுத்தி சுடுகாட்டுல குழிவெட்டி எறக்கினா… அந்த உருவாரம் யாரை நெனைச்சு செஞ்சு பூசை நடத்தியிருக்கோ அந்த மனுசன் ரத்தம் கக்கிச் செத்துப் போயிருவானாம்.”
எல்லைப்பாளையத்து அய்யனுக்கு ஆத்திரமாக வந்தது. “நீங்க பயப்படாதீங்க. இன்னிக்கு ராத்திரி நானா, இல்ல அந்த மந்திரவாதியான்னு பார்த்துக்கலாம்.” அன்று அமாவாசை தினம். எங்கும் கும்மிருட்டு. ஊருக்குள் மந்திரவாதி உருவாரப்பூசையைத் தொடங்கிவிட்டான். உருவாரத்தின் மீது துர்மந்திரங்களை ஏவி ஓதும் ஒலி ஊரின் நாலாத் திக்கும் பரவிற்று. அந்தத் தோட்டத்துக்காரர் மட்டுமல்ல, மொத்த ஊர்ச்சனங்களும் அச்சத்தில் நடுநடுங்கினர்.