

அந்தி கனமழை பெய்து ஓய்ந்த நாளின் முன்னிரவு. வெளிச்சப்புள்ளிகளுடன் இருள்நிலம் பின்னோக்கி நகர்வதைப் பார்த்தவாறே சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். தாராபுரத்திலிருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்து அதிவேகமாக விரைந்துகொண்டிருந்தது.
என் பின்னிருக்கைக்காரர் தான் எழுதிய கவிதைகளை அருகில் அமர்ந்திருந்தவரிடம் வாசித்துக் காட்டியபடியே வந்தார். அவர் எழுத்தாளர் என அறிந்ததும் நான் பின்னிருக்கை உரையாடலை உற்றுக் கேட்டபடியே பயணித்தேன்.