

நண்பர் ஒருவர் தனது ஊர்ப் பெயரை மலையூர் என்று எழுதினார். ‘அட மலேசியாவிலிருந்தா வர்றீங்க?’ என்றேன். ‘இல்லை மலையூரிலிருந்து’ என்றார். அது மலையூர் அல்ல, மழையூர் என்றதும் வெட்கத்தில் முகம் சிவந்து நின்றார்.
மலையூர் என்பது மலேசியா. மலைகள் சூழ்ந்த நாடு. முதலாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டுகளில் மலையூர் இடம்பெற்றுள்ளது. மலையூர் எனும் தமிழ்ப் பெயர் சீனர்களால் மோ லோ யு என்று உச்சரிக்கப்பட்டு, மலாயா என்றாகி, பிறகு அது மலேசியா என்றானது.
சேலம் மாவட்டத்தில் மலையூர் இருக்கிறது. சரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பது மலையூர்தானா? புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடிக்கும் ஆலங்குடிக்கும் இடையிலிருக்கும் இவ்வூரை மலையூர் என்றும் மழையூர் என்றும் எழுதிவருகிறார்கள்.
மலையூர் என்று எழுத அவ்வூரில் மலையோ குன்றோ இல்லை. இவ்வூர் மக்கள் மலைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து குடியேறியவர்களும் அல்லர். ஆகவே இவ்வூர் மலையூர் ஆகாது. மழையூர் என்று எழுது வதற்கு அவ்வூரில் பிரத்யேகமாக மழை பெய்வதும் இல்லை. பிறகு ஏன் இந்த ஊர் மழையூர் என்றானது?