

சைக்கிள்களின் மண்டை டைனமோ. தலைக்குத் தொப்பி வைத்த மாதிரியல்ல, தலையே வைத்த மாதிரி. எந்த சைக்கிளிலாவது டைனமோ இல்லை என்றால், லாலா கடை மூர்த்தியால் தாங்க முடியாது.
அந்த சைக்கிளையே பார்த்துக் கொண்டிருப்பான். பிறகு அவன் முகம் மாறும். தனது உள்ளங்கையைச் சொரிந்து கொள்வான். மனம் குறுகுறுக்கும்.
பிறகு முடியாமல், அந்த சைக்கிள்காரரிடம் அவர் முன்பின் தெரியாதவராக இருந்தால்கூட, "ஏண்ணே, இவ்ளவு ரூவா கொடுத்து வண்டி வாங்குதீங்க. ஒரு டைனமோ வாங்கலாம்லா? அது இல்லனா, முண்டமாலா இருக்கு" என்பான்.
சைக்கிள்காரர் அவனை வித்தியாச மாகப் பார்த்துவிட்டு, ஏதாவது சொல்லிவிட்டுப் போவார். அவனுடைய இனிப்புக் கடைக்கு வரும் சைக்கிள்களில் புது டைனமோ தெரிந்தால், கல்லாவில் இருந்து இறங்கிவந்து டைனமோவைப் பிடித்தபடி, "புதுசா?" என்பான்.
‘‘ஆமா.”
“மில்லர் கம்பெனியா?”
“ஆமா.”
“ஜப்பான் கம்பெனி ஒண்ணு வந்துருக்காம்லா...”
“சோனி.”
“அது நல்லாருக்குங்காவோ.”
“நல்ல பவரு. ராத்திரில போட்டா, ரோடு பூராலா வெளிச்சமா இருக்கு.” “ஒங்க வண்டிக்கு அத வாங்குங்க” என்பான் கரிசனையோடு. இரவு நேரத்தில் டைனமோ இல்லாத சைக்கிளில் சென்றால் போலீஸ்காரர்கள் பிடிப்பார்கள் என்பதால், டைனமோ கட்டாயமாகி இருந்த காலம் அது.