

பிரிட்டிஷ் இந்தியாவிலும் சென்னை மாகாணத்திலும் கிறிஸ்துவ மரபைப் பின்பற்றி ஞாயிறு விடுமுறை நாளாக இருந்தது. ஆனால், புதுக்கோட்டை சுதந்திர சுதேச அரசாக இருந்ததாலும் மன்னர் இந்து என்பதாலும் பிரிட்டிஷாரின் ஞாயிறு விடுமுறை விதிக்குக் கட்டுப்படாமல் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான்கள் திருக்கோ கர்ணம் பெரியநாயகி (பிரகதாம்பாள்) அம்மனைத் தங்கள் குலதெய்வமாக ஏற்று ஆட்சிசெய்தனர். அம்மன் வழிபாட்டுக்கு வெள்ளிக்கிழமை உகந்தது என்பதால் மன்னர் முதல் மக்கள்வரை அம்மன் வழிபாட்டில் பங்கேற்க, அந்நாளை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் முக்கியப் பொருளாதார மையமாக விளங்கியது வாரச்சந்தை. திருச்சிராப்பள்ளி, மதுரை நகருக்கு அடுத்ததாக மிகப்பெரிய சந்தையாக, புதுக்கோட்டை வாரச்சந்தை விளங்கியது. புதுக் கோட்டை நகரைச் சுற்றிலுமிருந்த நகர வணிகர்கள், நுகர்வோர்கள் நகருக்குள் நுழையும்படியாக புதுக்கோட்டை நகரம் ஐந்து வாயில்களைக் கொண்டிருந்தது.