

அல்லிக்குழி மலைத்தொடர் - திருவள்ளூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கிற குடியம் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. ஏறக்குறைய 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், அங்குள்ள குகைகளில் பழைய கற்கால (paleolithic) மனிதர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்தியிருக்கின்றனர் மானுடவியலாளர்கள்.
வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, அங்கிருக்கிற வழிகாட்டிகளின் துணையோடு பயணத்தைத் தொடங்க ஏதுவான நேரம் காலை 6 - 7 மணி. சூரியன் தலைக்கு மேலே தகிக்கத் தொடங்குவதற்கு முன்னால் நடக்கத் தொடங்கிவிட்டால், வழியெங்கும் நிறைந்து கிடக்கும் சரளைக்கற்களின் கடுமையும் வெயிலின் தாக்கமும் நம்மை வாட்டாமல் இருக்கும்.
சற்றுக் கால தாமதமானாலும், உடலில் இருக்கும் ஆற்றலை எல்லாம் அந்தச் சூழல் உறிஞ்சிவிட அனுமதிக்க வேண்டியிருக்கும். குடியம் குகைகள் தொடர்பான சின்ன சின்ன குறிப்புகள் ஆங்காங்கே காட்சிப் பலகைகளாக வைக்கப்பட்டிருக்கின்றன.
பயணத்தின் நடுவே இளைப்பாற ஏதுவாகச் சில ஓய்விடங்கள் உள்ளன. ஒரு கண்காணிப்புக் கோபுரமும் இருக்கிறது. அதன் மீது ஏறிப் பார்த்தால், அந்த மலைத்தொடரையும் சுற்றிப் பரவியிருக்கும் உலர் வெப்பமண்டலக் காடுகளையும் காணலாம்.
குடியத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் கண்டறியப்பட்ட 16 குகைகளில் தற்போது இரண்டில் மட்டுமே பார்வை யாளர்களை அனுமதிக்கிறது வனத்துறை. மாரத்தான் நடையைப் போலச் சீராகச் சென்றால், ஒருமணி நேரத்துக்கு முன்ன தாகவே முதலாவது குகையை அடையலாம்.
அதனைப் பார்த்தவுடனே, கற்கருவிகளை உருவாக்குவதற்காகவே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருப்பார்களோ என்கிற எண்ணம் மேலெழும். எரிமலைக் குழம்பு வெடித்துச் சிதறி, இறுகி, இந்தக் குகைகள் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.