

பெருநகரங்களில் பொருள்களை வாங்குவதற்கு சூப்பர் மார்க்கெட்களும் பிரம்மாண்டமான மால்களும் உள்ளன. ஆனால், சிறு நகரங்களில் வாரச் சந்தைகளே பொருள்களை வாங்கு வதற்கான இடங்களாக இருக்கின்றன.
அப்படி ஓர் இடம்தான் திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனை வாரச் சந்தை. இது அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்ற, நூற்றாண்டை நிறைவு செய்திருக்கும் சந்தை. பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து இடதுபுறமாகச் செல்லும் முதன்மைச் சாலையில் சிறிது தொலைவு நடந்தால் ஒரு பெரிய மைதானம் வரும்.
மற்ற நாள்களில் அமைதியாகக் காட்சியளிக்கும் அந்த இடம், ஞாயிற்றுக் கிழமைகளில் களைகட்டிவிடும். பணிமனை வாசலில் இருந்தே கடைகள் நம்மை வரவேற்கும்.
குழந்தைகளை ஈர்க்கும் கடைகள்
சந்தையின் நுழைவாயிலிலேயே குழந்தை களைக் கவர்ந்து இழுக்கும் விதமாக இருப்பவை செல்ல உயிரினங்களின் கடைகள்தான்.
வண்ண மீன்கள், புறாக்கள், கோழிக் குஞ்சுகள், காதல் பறவைகள், கிளிகள் என ஏராளமான செல்ல உயிரினங்கள் ஒருபுறமும் அவற்றுக்கான உணவு, கூண்டு உள்ளிட்ட பொருள்கள் மற்றொருபுறமும் கிடைக்கின்றன.