

ராஜவல்லிபுரம் என்கிற சிற்றூரில் அம்மா பிறந்தார். தாமிர பரணியின் மடியில் அமைந்த கிராமம். பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன் பிறந்த ஊரும் அதுதான். ஊரின் நடுவே ஒரு பெரிய கோயில். அம்மா அடிக்கடி தன் பதின்மூன்று வயதுவரை ஓடி விளையாடிய கோயில் என்பார். அதற்குப் பிறகு என்றால், `அதுதான் கல்யாணம் ஆகி `திர்நெவேலி’ வந்துட்டேம்லடா’ என்பார்.
எண்ணூறு வருடப் பழமையான கல்வெட்டுகள் அந்த அகிலாண்டேசுவரி அக்னீஸ்வர் கோயிலில் உள்ளன. `மேற்குப் பார்த்த கோயில் ரொம்ப அபூர்வம், இது அப்படி விசேஷமான கோயிலாக்கும்’ என்பார் அம்மா. ஊருக்குத் தென்மேற்கே சிதம்பரத்தில் உள்ளது போலவே செப்புக்கூரையின் கீழ் ஆனந்தத் தாண்டவமாடும் அழகியகூத்தரின் ஆலயம் ஒன்றும் உண்டு.