

மெட்ரோ நகரப் பரபரப்புக்கு இடையே இயற்கையோடு இயைந்து வாழ்வது என்பது பெருங்கனவு. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் பலரும், எதிர்காலத்திற்காக அப்படியோர் இயற்கை நேசத்தை நெஞ்சில் மட்டும் சுமந்து கொண்டு, நிகழ்காலத்தில் கால்களில் இறக்கையைக் கட்டிக்கொண்டு பறக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களை, ‘சற்று நேரம் அதிலிருந்து விடுபடலாமே’ என ஆசுவாசப்படுத்துகிறது சென்னை திருமங்கலம் விஆர் மாலில் நடை பெற்றுவரும் ‘மெட்ராஸ் ஆர்ட் கில்டு’ கண்காட்சி. பிப்ரவரி 12 முதல் மார்ச் 22 வரை இந்தக் கலைக்காட்சி நடைபெறுகிறது.
கடற்கரையோரக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட 10 அடி உயர வரவேற்பு வளைவே, எப்படிப்பட்ட கலைப்படைப்பு களை அடுத்து காணப்போகிறோம் என்பதை முன்னுணர்த்திவிடுகிறது. அதனை வழிமொழிவதுபோல கலையம்சம் மிக்க ஓவியங்களைத் தாங்கி நிற்கிறது ஒரு அம்பாசிடர் கார்.