நொந்த குமாரனின் அனுபவங்கள்: மனைவியே ‘மனம் கண்ட தெய்வம்’

நொந்த குமாரனின் அனுபவங்கள்: மனைவியே ‘மனம் கண்ட தெய்வம்’
Updated on
2 min read

மேமாதத் தொடக்கத்தில் பெரும்பாலான பேருந்து நிலையங்களில் கோடை விடுமுறைக்காகத் தாய் வீடு செல்லும் மனைவியரைக் குதூகலத்துடன் வழியனுப்பிய கணவன்மார்களைக் கண்டிருக்கலாம். ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என்று ‘அக்னி நட்சத்திரம்’ லக்‌ஷ்மிபதி போல ஆனந்தமாக வீடு திரும்பிய அன்னார்கள், விட்டு விடுதலையாகும் சிட்டுக்குருவி போலச் சொற்ப நாள்களேனும் சுதந்திரத்தைக் கொண்டாடலாம் என்று திட்டமிட்ட அப்பாவிகள்.

ஆனால், ஆரம்பகட்ட ஆனந்தம் மெல்ல மெல்லத் தொல்லையாகி அவஸ்தை ரூபத்தை எட்டியபோது மனைவியே ‘மனம் கண்ட தெய்வம்’ எனும் இறுதி முடிவுக்கு அந்த ஆன்மாக்கள் வந்ததுதான் வெப் சீரிஸ்களிலும் இல்லாத வித்தியாசத் திருப்பம். ஏறத்தாழ அரை மாதக் கால பிரம்மச்சாரி வாழ்வுக்குப் பின்னர், பேருந்து நிலையங்களில் பேயறைந்த தோற்றத்துடன் மனைவிமார்களை வரவேற்கக் காத்திருந்தவர்களின் முகமே சொல்லிவிடும் அவர்கள் பட்ட அவஸ்தைகளை.

கார்ட்டூன் பார்ப்பதற்காக ரிமோட் கன்ட்ரோலைக் கட்டிலுக்குக் கீழே பதுக்கிவைக்கும் குழந்தை கள், சமையல் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக அந்த வஸ்துவை அடுக்களையில் ஒளித்துவைக்கும் மனைவி என எந்தவிதமான குறுக்கீடும் இல்லாமல் ஐபிஎல் மேட்ச்களைப் பார்த்து ரசித்தனர் பலர்.

எனினும், ‘தோனி இருந்தும் பயந்த சனமாக’ சென்னை அணி அவ்வப்போது தோல்விகளைச் சந்தித்தது கர்நாடகத் தேர்தல் முடிவு களைப் பார்த்த பாஜகவினரைப் போல பலரையும் பதறவைத்தது. இறுதிப் போட்டியில் பெய்த மழை, வருமானவரிச் சோதனைகளை உக்கிரமாக எதிர் கொண்ட உடன்பிறப்புகளைப் போல கொந்தளிக்கச் செய்தது.

மனைவி ஊரில் இல்லை எனும் தைரியத்தில், காலை எட்டு மணிக்குத் துணிமணிகளுக்கு இடையே துயிலெழுந்து, தூக்கக் கலக்கத்தில் குளித்து முடித்துப் புறப்பட்டுச் செல்லும் வழியில் செட் தோசைகளை உள்ளே தள்ளி, மதிய உணவுக்கு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு மகிழ்ந்த காலம், கணவன்மார்களைப் பொறுத்தவரை சோழர் காலத்தை விஞ்சிய பொற்காலம்!

சுற்றுவட்டாரத்தில் மனைவியின் நடமாட்டம் இல்லாத நாள்களில் (மட்டும்) மது அருந்துபவர்கள், நண்பர்களுடன் ‘பார்ட்டி’க்குச் செல்பவர்கள் கோடை விடுமுறைக் கால மாலை வேளைகளில் கூடுதல் உற்சாகத்துடன் வலம்வருவார்கள்.

பணவீக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய காலத்தில் பழைய பாணியில் ‘பார்ட்டி’களைத் தொடர முடியாது. தனியார் பார்களில் ‘டிப்ஸ்’கூடக் கொடுக்க முடியாத அளவுக்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டும். டாஸ்மாக் பார்களிலோ பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்துத்தான் சரக்கு வாங்க முடியும் என்பது தமிழ்நாட்டின் தற்கால அவலம்.

ஆகையால், கைமீறும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், கோடைக்காலத்துக் குடிப் பழக்கத்தைக் கைவிட்டவர்கள் ஏராளம். விலைவாசி உயர்வு இப்படி ஒரு நன்மைக்கு வழிவகுத்திருக்கிறது பாருங்கள்!

அதேபோல, ஆரம்பத்தில் பிரியாணி முதல் ஃபிரைடுரைஸ் வரை விதவிதமான உணவு வகைகளைச் செயலிகள் மூலம் ஆர்டர் செய்து ருசித்து மகிழ்ந்தவர்கள், கடந்த ஆண்டைவிடவும் கடுமையான விலையேற்றம் இருப்பதை உணர்ந்து, கையைச் சுட்டுக்கொண்டேனும் சொந்தமாகச் சமைக்கக் கற்றுக்கொண்டு விட்டார்கள்.

எனினும், விபரீதங் களைத் தவிர்க்க, வீடியோ காலில் மனைவி சொல்லித் தந்த சமையல் குறிப்புகளை மட்டுமே செய்து சாப்பிட்டுவந்தவர்கள் விரைவில் விரக்தியடைந்து பிரெட், நூடுல்ஸ் எனப் பின்வாங்கிவிட்டார்கள். இதனால் உப்புசம் முதல் உணவுக் குழாயில் அடைப்பு வரை ஏகப்பட்ட பின்விளைவுகளை எதிர்கொண்டது இன்னொரு சோகம்.

இத்தகைய காரணங்களால், மொத்தமாக நொந்துபோன கணவன்மார்கள், ‘ஏழாம் தேதிதான் ஸ்கூல் திறக்குது. இருந்தாலும் உங்களையெல்லாம் பார்க்காம இருப்பே கொள்ளலை’ என ‘மனதின் குர’லை மனைவியிடம் சொல்லி, மறுக்க வாய்ப்பில்லாமல் திரும்ப அழைத்துக்கொண்டார்கள். செல்போன் யுகத்திலும் செங்கோல் கதைகளை வெற்றிகரமாகப் பரப்பிவிடலாம். ஆனாலும், வாயிலேயே எத்தனை நாள்களுக்கு வடை சுட முடியும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in