திண்ணைப் பேச்சு 01: வெயில் போற்றுதும்!

திண்ணைப் பேச்சு 01: வெயில் போற்றுதும்!
Updated on
2 min read

வெயில் கொளுத்த வில்லை, சுட்டெரிக்கிறது! தமிழ்நாட்டின் பல நகரங்களில் வெயில் சதம் அடித்தது என்று வெயிலை கிரிக்கெட் வீரராக்கிப் பத்திரிகைகள் வர்ணிக்கின்றன.தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வெயிலுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினாலும் வெக்கை தாங்க முடியவில்லை.

மாமழை போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! திங்கள் போற்றுதும் என்று சிலப்பதிகாரம் இயற்கையைப் போற்றுகிறது. ‘வெயில் போற்றுதும்’ என்று நாம் பாட முடியுமா?

வெயிலைப் போற்றுவதாவது... அதுவும் இந்தக் கோடை வெயிலைக் கொண்டாட முடியுமா?

பாரதி கொண்டாடினான். ஜகத் சித்திரம் என்கிற சிறு நாடகத்தில் ஒரு பசுமாடு, ‘வெயிலைக் காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை’ என்று சொல்லும்.

எப்படிச் சாப்பிடுகிற பதார்த்தமாக வெயில் ஆனது? மர நிழலில் படுத்துக்கொண்டு அசைபோடும் மாடு வெயிலைத்தான் தின்னுகிறது போலும்!

பாரதி மட்டுமல்ல வேப்பமரங்களும் புங்கமரங்களும்கூட வெயிலைக் கொண்டாடுவது போலத் தோன்றுகிறது. பச்சைப் பசேல் இலைகள்! ‘இலைகள் மரங்களின் சந்தோஷங்கள்’ என்பார் அப்பா.

நகரத்து மனிதர்கள்தாம் வெயிலைக் கண்டு பயப்படுகிறார்கள். கிராமங்களில் உழுது பயிரிடும் உழவர்கள் வெற்று உடம்போடு நாற்று நடுகிறார்கள். களை பறிக்கிறார்கள். வெயில் அவர்களின் தோழன். கதிரவன் கடவுள். வெயிலோன் அவர்களின் நாடி நரம்புகளிலே உயிர் பாய்ச்சுகிறான்.

நண்பகல் வேளையில் உச்சிவானில் வட்டமிடும் கழுகுகள் நீல அலை அடிக்கும் வானத்து நீர்ப்பரப்பில் ஆனந்தமாக நீந்துவனபோல் தோன்றுகிறது.

நண்பகலில் வீதிகள் ஒருவித மோனத்தில் ஆழ்ந்து கிடக்கின்றன. எங்கிருந்தோ இடைவிடாது கத்தும் அணில்கள் அந்த மோனத்தைக் கொறித்துத் தள்ளுகின்றன.

வெயிலை ரசிப்பது ஒன்றே வெயிலிலிருந்து நம்மைக் காக்கும் உபாயம். அப்படி ரசிக்க வேண்டுமானால் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு காகம் புங்கமரத்தின் கிளையில் உட்கார்ந்தபடி சிறகு கோதுகிறது. மதிய வேளைகளில் அக்காக் குருவிகள் தங்களின் இணைதேடிக் கூவுவது காதல் ஏக்கத்தின் உச்சம். பங்குனியில் கூவ ஆரம்பிக்கும் அக்காக் குருவிகள் வைகாசிவரை கூவும்.

இந்த வெயிலிலும் குப்பைப் பொறுக்குபவர்கள், ‘பழைய பேப்பர் வாங்கறதேய்’ என்று தெருத் தெருவாக அலைபவர்கள், தோளின்மீது தொழிற்கூடம் சுமக்கும் சாணை பிடிப்பவர்கள், தலைச்சுமை வியாபாரிகள் எல்லாருக்கும் ஒரு பொதுவான குணம் இருக்கிறது. அவர்களுக்கு வெயில்மீது எந்தப் புகாரும் இல்லை.

பொம்மை வியாபாரி ஒருவர் கூடை நிறைய பொம்மைகளுடன் வாசலில் வந்து நின்று, ‘பொம்மை வேணுமா ஐயா?’ என்று வியர்த்துவழியக் கேட்கும்போது மறுக்கத் தோன்றுவதில்லை.

அவர் தலையிலிருந்து பொம்மைக் கூடையை இறக்கி திண்ணையில் வைக்கும்போது கொஞ்ச நேரமாவது பொம்மைகள் நிழலில் இளைப்பாறட்டும் என்று தோன்றுகிறது.

வெயில் வேளையில் விசிறி விற்பவரைப் பார்த்து,

‘கூடை நிறைய

காற்றின் துண்டுகளை

சுமந்து செல்கிறான்

விசிறி விற்பவன்’ என்று பாடுகிறார் ஒரு ஜப்பானியக் கவிராயர். வெயில் இல்லாவிட்டால் இப்படி ஓர் அழகான கவிதை கிடைத்திருக்குமா?

இன்றும் தஞ்சை மேல வீதியில் வெயிலைப் பொருள்படுத்தாமல் சர்ரென்று சைக்கிளில் வந்து இறங்குகிறார் நடுத்தர வயது மனிதர் ஒருவர். காவி உடை, பச்சை முண்டாசு, சட்டென்று பையிலிருந்து ஒரு விசிறியை எடுக்கிறார். சாலை ஓரம் தேநீர்க்கடை அருகே வியர்த்து வழிய வெயிலில் நின்றபடி தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தவர்களை நெருங்கி விசிற ஆரம்பிக்கிறார்.

“ஏதோ என்னால முடிஞ்சதுங்க. நெருப்பை வாரிக் கொட்டுது வெயில். காசு பணம் தரமுடியாது. கையளவு காத்து தரலாமே! ”என்று எனக்கும் விசிறிவிட்டார். வெறும் காற்றின் விசிறல் அல்ல அது. மனித நேயத்தின் விசிறல்!

எங்கள் ஊரில் வயதான பெண்மணி ஒருவர் இருந்தார். வெயில் வேளையில் கடைத்தெரு, ரேஷன்கடை, பேருந்து நிறுத்தம் என்று எங்கு வேண்டுமானாலும் நடமாடிக்கொண்டிருப்பார். இதனாலேயே இவருக்கு ‘வெயில் மாமி’ என்கிற பெயர் ஏற்பட்டுவிட்டது.

“வெயில் தாழ்ந்து வரக் கூடாதா?” என்று அவரிடம் கேட்டேன். “வெயில் வேளையில் கடை வீதியே ஹோன்னு கெடக்கு பார். கைவீசி தாராளமாக நடக்கலாம். என்ன வியாதி ஆனாலும் ஒரு தடவை வெயிலில் நடந்து போயிட்டுவா. சரியாகிடும்” என்று சொல்லிவிட்டு வெயிலில் நடையைக் கட்டினார் வெயில் மாமி.

‘வெயிலுக்குகந்த அம்மன்’ என்கிற பெயரில் விருதுநகரில் ஓர் அம்மன் கோயில் இருக்கிறது. அந்த ஊரில் ‘வெயிலாத்தா’, ‘வெயிலான்’ என்கிற பெயர்கள் சகஜம்.

திருச்சி உறையூரில் ‘வெக்காளி அம்மன்’ என்கிற பெயரில் எவ்விதமான மேற்கூரை மண்டப விதானமுமின்றி வெற்று வெளியில் வீற்றிருக்கிறாள் வெக்காளி அம்மன். பக்தர்கள் அவள் நிழலில் இளைப்பாறுகிறார்கள்.

‘கர்ணன்’ படத்தில் சூரியனை வணங்கும் சிவாஜிக்கு கண்ணதாசன் எழுதிய ‘தூரத்தே நெருப்பை வைத்து, சாரத்தைத் தருவாய் போற்றி’ என்கிற வரிகளை மறக்க முடியுமா?

பெண்மான் இளைப்பாற ஆண்மான் வெயிலில் நின்று நிழல் தந்த அகநாறூற்றுக் காட்சியை என் தமிழாசிரியர் நயமாகப் பாடம் நடத்துவார். ‘மெல்லியலாளர்களான பெண்களை ஆண்கள் நிழல் தந்து காக்க வேண்டும். இதை விலங்குகளிடம் கற்க வேண்டும்’ என்பார்.

காந்திஜியின் சீடரான ஜே.சி. குமரப்பாவின் வரவேற்பறையில் ஒரு படம் மாட்டியிருக்கும். பெயர் தெரியாத ஒரு விவசாயி கோவணத்துடன் வெயிலில் கலப்பை பிடித்து உழுதபடி செல்லும் காட்சி.

‘யார் இவர்’ என்று கேட்பவர்களுக்கு குமரப்பா சொல்லும் பதில், “இவர்தான் என் குருநாதரின் குருநாதர்!” (He is my Master’s Master).

ராமபிரான் போருக்கு இலங்கை சென்ற வழியில் அகத்தியரைச் சந்திக்கும்போது, அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்கிற மகாமந்திரத்தை உபதேசிக்கிறார். சூரியனே மருந்து என்பதே இம்மந்திரத்தின் உள்பொருள். ஆம்; சூரியனே மருந்து! வெயிலே நம் விருந்து!

வெயில் போற்றுதும்!

(பேச்சு தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in