

நேபாளத்தைச் சேர்ந்த ஹரி புதாமகர் எவரெஸ்ட்டில் ஏறி, உலக சாதனை படைத்திருக்கிறார். இவருக்கு இரண்டு கால்களும் இல்லை. 8,848.86 மீட்டரைச் செயற்கைக் கால்களின் உதவியோடு கடந்து எவரெஸ்ட்டைத் தொட்டிருக்கிறார்.
2010ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணுவத்துக்காக ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றார். அப்போது தாலிபன்களின் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் இரு கால்களையும் இழந்தார். ஓராண்டு சிகிச்சைக்குப் பிறகு பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் கிளிமஞ்சாரோ உள்படப் பல்வேறு மலைகளில் ஏறியிருக்கிறார். தற்போது உலகின் மிக உயரமான சிகரத்தில் ஏறி புதிய சாதனையைப் படைத்துவிட்டார் 44 வயது ஹரி புதாமகர்.
“நான் சாதனைக்காக இந்த முயற்சியில் இறங்கவில்லை. என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையும் விழிப்புணர்வையும் அளிப்பதற்காகவே இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறேன். நான் ஒரு மாற்றுத்திறனாளியாக மாறியதை நினைத்து ஒருநாளும் கண்ணீர் விட்டதில்லை.
இதுபோன்று சாதனைகளை நிகழ்த்தும்போதுதான் மகிழ்ச்சியில் கண்ணீர் விடுவேன்” என்று சொல்லும் புதாமகர், 2017ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் எவரெஸ்ட் உள்பட மலைகளில் ஏறுவதற்கு அரசு விதித்த தடையின் காரணமாகத் தன் முயற்சியைத் தள்ளிப்போட்டார். சட்டப்படி தடை நீக்கப்பட்டதால் இன்று புதிய வரலாற்றை எழுதிவிட்டார்.