

அடிக்கிற வெயில் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. பால் சர்பத், நுங்கு சர்பத்தைத் தொடர்ந்து ‘இளநீர் சர்பத்’ சென்னை நகரின் பல பகுதிகளிலும் கிடைக்கிறது. ஓர் இளநீரின் விலை 40, 50 ரூபாய்க்குச் சென்றுவிட்டதோடு, சூடான இளநீராகவும் மாறிவிடுகிறது.
அதனால், மக்கள் தாகத்தைத் தீர்ப்பதற்குச் சில்லென்று இருக்கும் பானங்களை நாடுகிறார்கள். அந்த எண்ணத்தைப் புரிந்துகொண்டு இளநீர், தேங்காய்ப்பால், இளம் தேங்காய்த் துண்டுகள், பாதாம் பிசின், சப்ஜா விதைகளைக் கலந்து சர்பத்தாகக் கொடுக்கிறார்கள்.
ராதாகிருஷ்ணன் சாலையில் காரில் இளநீர் சர்பத் விற்றுக்கொண்டிருந்த முபாரக், “மின்ட் பகுதியில் தயாரித்து வெயிலுக்கு முன்பே கொண்டு வந்துவிடுவோம். இங்கே ஒரு நாளைக்கு நான்கு கன்டெய்னர் சர்பத் விற்பனையாகிறது. ஒரு கன்டெய்னருக்கு 37 சர்பத் கிடைக்கும்.
வெயில் அதிகமாக இருப்பதால், 40 ரூபாய் என்பதைப் பொருள்படுத்தாமல் சாப்பிடுகிறார்கள். அதனால், வெகு வேகமாக விற்பனையாகிவிடுகிறது” என்று சொன்னதோடு, “இது சூட்டைத் தணிப்பதால் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்” என்கிற லேட்டஸ்ட் டிரெண்டான ஹெல்த் டிப்ஸையும் அள்ளிவீசுகிறார்!