

என்னுடன் பள்ளியில் படித்த மாணவர்கள் 32 பேர் இதே ஊரில் வேலை செய்து வருவதால், இன்றும் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு முறை ’நண்பர்கள் சந்திப்பு’ வேறு ஏற்பாடு செய்துவிடுவோம். அதில் எங்களுடன் படித்து வெளியூரில், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் வாய்ப்பிருந்தால் கலந்துகொள்வார்கள். 50களில் இருக்கும் நாங்கள் நண்பர்களைச் சந்திக்கும்போது மட்டும் பள்ளி நாள்களுக்குச் சென்றுவிடுவோம்.
ஒரு நண்பனின் மகன் கல்யாணத்தில் எங்களுடன் படித்த புனிதாவையும் லட்சுமி யையும் நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்தோம். “நீங்க வாட்ஸப் குரூப் எல்லாம் ஆரம்பிக்கலையா? இன்னும் இப்படி பூமரா இருக்கீங்க” என்று கிண்டல் செய்தாள் புனிதா. “நாங்க எல்லாம் வாட்ஸப் குரூப் வச்சிருக்கோம். வருஷத்துக்கு ரெண்டு தடவை சந்திக்கிறோம்” என்றேன் நான்.