

‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்று கவிஞர் பாடியதுபோல, ஒரு சிறிய இட்லிக் கொப்பரையும் எண்ணெய்ச் சட்டியும் இருந்தால் போதும். பஜாரில் பத்துக்குப் பத்து சதுர அடியில் ஒரு கிளப்புக் கடை ஆரம்பித்து விடலாம். ருசியாக சாம்பார், சட்னி, வடை செய்யத் தெரிந்தால் நாளாவட்டத்தில் நல்ல பேர் எடுத்துப் பெரிய கடையாகவே மாறலாம். ஆனால், பெரும்பாலும் சிறிய இடத்தில் ஆரம்பித்தவர்களில் சிலரே கடையை விரிவாக்கிக்கொண்டே போவார்கள். பலரும் கடையைப் பெரிதாக்கினால் ராசி போய்விடும், வியாபாரம் கெட்டுவிடும் என்று நினைப்பார்கள்.
எங்கள் ஊரில் ‘கணபதி விலாஸ் சைவாள் காபி கிளப்’ ஒன்று உண்டு. அதற்கு கணபதி விலாஸ் என்று பெயர்ப்பலகை இருந்தாலும், கூப்பிடுவதென்னவோ ‘கல்லூர் தாத்தா’ கடை தான். அதை ஆரம்பித்த பெரியவருக்கு ஊர் கல்லூர். அவர் அதிகம் ஆசைப்பட மாட்டார். மத்தியானம் சாப்பாடு, காலை யிலும் மாலையிலும் இட்லி, வடை, பூரி கிழங்கு இவ்வளவுதான் மெனு. வடை, பூரி சீக்கிரமே காலியாகிவிடும். கடைசியில் மிஞ்சுவது சுடச்சுட இட்லி மட்டும்தான்.