

அந்தி மஞ்சள் வெயில் படிந்த மண்சாலை ஓரத்துத் தும்பைகளில் தசரதப் பட்டாம்பூச்சிகள் தேன் உறிஞ்சிக்கொண்டிருந்தன. நான் மிதிவண்டியில் குரங்கு பெடலடித்து நல்லிமடத்தின் வடக்குப்புறத்திற்குச் சென்று சேர்ந்தேன். மாராண்டியின் வீடு பாவடிக்கற்களின் ஊடே காமாட்சியம்மன் கோயிலை ஒட்டி இருந்தது. வீட்டைச் சுற்றிலும் கைத்தறி நெசவாளர்களின் நூற்பாவுகள் பாவடிக்கற்கள் இடையேயான மூங்கிலில் காய்ந்துகொண்டிருந்தன.
எருமைக் கட்டுத்தரையும் வெள்ளாட்டுக் கொட்டாரமும் கொண்ட வீடு. வெள்ளாட்டுக்குட்டிகளை அடைக்கும் கொடாப்புப் பக்கத்திலிருந்து மாராண்டி என்னைப் பார்த்துவிட்டு வாசலுக்கு வந்தார். நெற்றியிலும் கைகளிலும் மார்பிலும் திருநீறு பூசி சந்தனப் பொட்டு இட்டிருந்தார். நான் பெரியப்பா சொல்லச் சொன்னதை அப்படியே ஒப்பித்தேன்.