

ஆடிக் கோடைக்காற்று விசைகொண்டு செம்மறிப்பட்டிக்குள் புகுந்து கடந்தது. இரவெல்லாம் கடுங்குளிரில் செம்மறிகள் சிட்டெடுத்து நடுங்கின. பட்டிக்குள் கோடைக்காற்று நுழைவதைத் தடுக்க கரைவெளி வயல் பருவக் காரருடன் சேர்ந்து பனையோலை ஒதுக்குப்படல்களை அப்பா கட்டினார்.
செம்மறிகளை மேய்ப்பதற்குச் சரியான ஆள் கிடைக்காமல் சிரமப்படுவதைப் பருவக்காரரிடம் சொன்னார் அப்பா. அந்தியில் வேலை முடிந்து புறப்படும்போது பருவக்காரர், “எங்கவூர்ல ஒரு பையன் இருக்கான். கூட்டிக்கிட்டு வரட்டுங்களா?” எனக் கேட்டார்.
அப்பா சம்மதித்தார். மறுதினம் கோடைமழை தூறிய விடியற்பொழுதில் பருவக்காரர் செம்மறி மேய்க்கும் பையனையும் அவனுடைய தந்தையையும் தோட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார். பையன் காதுகளில் பித்தளைக் கடுக்கு அணிந்திருந்தான். சுருள்சுருளாய் செம்பட்டைத் தலைமுடி. ராஜபற்கள் உதடுகளுக்கு வெளியே துருத்தியிருந்தன. வயிறு மட்டும் ஊதிப் பிதுங்கியிருந்தது. பையனின் தோற்றம் அப்பாவை யோசிக்கவைத்தது. பருவக்காரர் விடுவதாக இல்லை.