

வைகறை வெளிச்சம் பரவும் தருணம். எங்கள் தோட்டத்து வீட்டு வாசலில், தாழைக்கரையிலிருந்து வரும் தொண்டன் நின்று குரலிட்டுக் கொண்டிருந்தார். “தாழம்பூ… திருகுமணை… அம்மிணியோவ்…” அம்மாவும் பெரியம்மாவும் சமையல் கட்டுக்குள்ளிருந்து வெளித் திண்ணைக்குப் போயினர். நாங்களும் பின்னே ஓடினோம்.
தொண்டன் தன் இருதோள்களிலும் திருகுமணை களைக் (பிரிமணை) கோத்துத் தொங்க விட்டபடி நின்றிருந்தார். சும்மாட்டுத் தலையில் தாழம்பூ மடல்களைச் சேர்த்துக் கட்டிய சிறுசுமை. தொண்டன் வைக்கோல் பிரி முறுக்கிச் சுற்றிப் பின்னிய திருகுமணைகளைத் தனித்தனியே அவிழ்த்து வெளித்திண்ணையில் பரப்பினார். தாழம்பூ மடல் சுமை யையும் இறக்கிவைத்தார்.