

எங்கள் தோட்டத்து வீட்டு ஆசாரத்துக் (முற்றம்) கட்டிலில் படுத்துக் கிடந்தேன். காய்ச்சல் அனலாகக் கொதித்தது. இளமதியத்திலேயே தாராபுரத்து ஆஸ்பத் திரிக்குப் போய்வந்தும் குணமாகவில்லை. அம்மா கைக்குழந்தையான தங்கை தமிழாவை இக்கத்தில் இடுக்கியபடி கட்டில் அருகில் நின்று அழ ஆரம்பித்து விட்டார்.
பெரியம்மா சட்டெனச் சொன்னார்: “பையனை இச்சுப்பட்டி பெருமாள் போயருகிட்ட கூட்டிக்கிட்டுப் போங்க. தின்னீரு மந்திரிச்சு செரவு அடிச்சா செரியா போயிரும்.” அந்தக் கணத்தில் எல்லாருக்கும் ஒரு சிறு நம்பிக்கை துளிர்த்தது. அப்பா அவசரமாகச் சவ்வாரி வண்டியில் எருதுகளைப் பூட்டினார். அம்மா வண்டியிலேறி என்னை மடியில் கிடத்தி அமர்ந்தார். சவ்வாரி வண்டி குறுமண்சாலையில் வேகமெடுத்துப் பயணித்தது.