

தோட்டவெளியில் மார்கழி மூடுபனி கவிழ்ந்து கிடந்தது. ஈசானத்திசையில் பருத்திக்காட்டுக்கு மருந்தடிக்கும் ஓசை கேட்டபடியிருந்தது. நான் வீட்டின் ஆசாரத்துக்குள்ளிருந்து (வீட்டு முற்றம்) வேதியியல் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, வாசலின் வடக்கோரம் நிறுத்தியிருந்த சவாரி வண்டியினுள் ஏறி அமர்ந்தேன்.
அது அரைப் பரீட்சை காலம். யாரும் தொந்தரவு செய்யாத இடம் இந்தச் சவாரி வண்டிதான். மேற்குத் தோட்டத்தில் சூரியகாந்தி விதைகள் ஊன்றும் புழுதி உழவுக்கு எருதுகள் போய்விட்டன. இன்று சவாரி வண்டி பூட்டும் சாத்தியமும் குறைவு. மனம் படிப்பில் ஒன்றும் கணத்தில், வாழைத்தோப்பை ஒட்டிய மாட்டுக்கட்டுத்தரையில் குப்புசாமியின் குரல் கேட்டது. நான் புத்தகத்துடன் எழுந்து போனேன். குப்புசாமி அம்மாவைக் கூப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருந்தார். “நம்ம பித்தாசாரி செத்துப் போயிட்டாருங்க.”