

நெடுந்தென்னைகளின் பசுமட்டைகளில் உன்னிக்கொக்குகள் உட்கார்ந்து சிறகு கோதியபடி இருந்தன. கிழக்கு ஆகாயத்தில் பொழுது உதிக்காமல் செம்பரலடித்துக் கிடந்தது. எங்கள் தோட்டத்து வீட்டு வாசலில் பச்சைப் புகையிலை பாரம் ஏற்றிய லாரி தார்பாய் அவிழ்த்த நிலையில் நின்றிருந்தது.
வீட்டின் மேற்குப்புறம் இருந்த புகையிலைக் கொட்டகையில் சங்காயம் (புகையிலை) உரிக்கும் பெண்கள் இன்னும் வேலைக்கு வரவில்லை. நான் வெளித்திண்ணையில் உட்கார்ந்தபடி பெரியப்பா மகன் கண்ணப்பண்ணன் எழுந்து வருவதற்காகக் காத்திருந்தேன்.