

வீட்டில் ஒரு நல்ல நிகழ்வு என்று வந்து விட்டால் கூடவே எப்படி நடத்தப் போகிறோம், எல்லாரையும் அழைக்க வேண்டும், யாரும் விடுபடக் கூடாது என்பது போன்ற பரபரப்பும் லேசான பயமும் தொற்றிக்கொள்ளும். ஆரம்பக் காரியங்கள் எல்லாம் சரியாக நடந்தாலும், நிகழ்ச்சி அன்று வந்தவர்களைச் சரியாகக் கவனிக்கவில்லை, சாப்பாடு தட்டிப் போச்சு போன்ற `ஆவலாதிகள்’ (மனக்குறை) இல்லாமல் விசேஷம் கழிய வேண்டும் என்கிற புதிய கவலைகள் அழையா விருந்தாளியாக வரத் தொடங்கிவிடும்.
இப்போதுபோல கேட்டரிங் சர்வீஸ் இல்லாத அந்தக் காலத்தில் எது ஒன்றிற்கும் வீட்டு ஆட்களே அலைய வேண்டும். வீட்டில் அதற்குத் தோதுவான ஆட்கள் இருக்க வேண்டும். அதேநேரம், உறவுக்காரர்கள் ஒத்துழைப்பு இருக்கும். அதற்கு நாமும் அவர்கள் வீட்டு விசேஷத்தில் இறங்கி வேலை செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமல் சிலர் நான் இருக்கிறேன் என்று வந்து நிற்பார்கள். முருகன் அதில் ஓர் ஆள். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவன். அன்பில் பல வயது மூத்தவன்.