

அமெரிக்காவின் பிரபல யூடியூபர் கிறிஸ் லூயிஸ் இந்திய உணவு வகைகளைச் சுவைப்பதற்காக இரண்டாவது முறையாக இந்தியா வந்திருக்கிறார். அவர் பயணத்தின் ஒரு திட்டமாக, சென்னையில் 3 நாள்கள் தங்கி, சமூக வலைதளங்களில் பிரபலமான உணவகங் களைத் தேடிச் சென்று, தன் அனுபவங் களை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெருக்களில் பயணத்தை ஆரம்பித்த கிறிஸ், மேப் வழிகாட்ட ஜன்னல் கடைக்குச் செல்கிறார். அங்கே வரிசையில் நின்றிருந்த ஒருவர், கிறிஸின் ஃபேன் என்று அறிமுகம் செய்துகொள்கிறார். ஒரு வடை, பொங்கலுடன் பூரிக்கு வைத்திருந்த உருளைக்கிழங்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு, ‘தேங்காய்ச் சட்னி பிரமாதம், உருளைக் கிழங்கு சட்னி ஆஹா’ என்று சாப்பிட்டுக் கொண்டே வீடியோ எடுக்கிறார்.