

என் சிறு வயதில் பக்கத்து வீட்டில் ஒரு வயதான தம்பதி இருந்தனர். இருவருக்கும் குழந்தைகள் கிடையாது. தாத்தாவும் ஆச்சியும் மட்டும்தான். தாத்தா கண்டிப்பான பேர்வழி. ஆனால், அவர் உண்டு அவர் ஜோலி உண்டு என்று இருப்பவர். தூத்துக்குடி ஹார்வி மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். காலையில் ஒன்பது மணிக்கு வெளியே கிளம்பினால் நேராக நூலகத்துக்குப் போவார்.
தினமணி, ஹிண்டு பேப்பர்களைப் படிப்பார். பதினோரு மணிக்குப் பெரிய கோயில் போய், ஊஞ்சல் மண்டப நடையில் அமர்ந்து அவரையொத்த நண்பர்களுடன் நாட்டு நடப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். பிரயோசனமான அரட்டையில் தினமணி ‘கணக்கன்’ கட்டுரைகளைப் படித்துவிட்டு விவாதிப்பார்கள். அங்கே கூடுபவர்களில் ஒருவர் அடிக்கடி ஹிண்டுவுக்குக் கடிதம் எழுதுபவர்.