

தடபுடலான திருமணம். நிறைய கூட்டம். மணமக்களின் பெற்றோர் ஊரில் பேரும் புகழும் வசதியும் படைத்தவர்கள். ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் சாப்பிடும் இடத்தில் சற்று நெருக்கடியாக இருந்தது. எப்போதுமே எல்லாருக்குள்ளும் பந்திக்கு முந்து கிறகுணம் ஒளிந்தே இருக்கும் என்பதை நிரூபிக்கும் நாகரிகமான தள்ளுமுள்ளு.
நான் இரண்டு வரிசைகளில் முயல ஆட்கள், இசை நாற்காலி போலச் சட்சட்டென்று உட்கார்ந்துவிடவே, இடத்தைத் தவறவிட்டு விட்டேன். அல்லது ஆள் வருது என்று யாராவது இடம்பிடித்து வைத்திருந் தார்கள். அப்போதுதான் அவர், `தம்பி இங்கே வாங்க’ என்று கூப்பிட்டு ஒரு கைக்குட்டையைக் காவல் வைத்திருந்த இடத்துக்கு அழைத்தார். அவரைப் பார்த்தே ரொம்ப காலம் ஆகியிருந்தது. அவர் பக்கத்து ஊரில் டூரிங் டாக்கீஸ் நடத்திவந்தார்.