

அக்காவுக்குக் கல்யாணம் ஆன புதிது. தென்காசியில் மறுவீடு முடிந்த மறுநாள் குற்றாலம் ஐந்தருவிக்குப் போக முடிவெடுத்தார்கள். அப்போதெல்லாம் குற்றாலத்துக்குத் தென்காசியில் இருந்து பேருந்துகள் மிகக் குறைவு. இரண்டு இரட்டை மாட்டு வண்டிகளைக் கட்டிக்கொண்டு புறப் பட்டோம். எனக்கு ஒன்பது வயது.
‘வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம் வந்திருந்த புதிது. அந்தப் படத்தில் வருகிற `மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு காட்டுவழி போறவளே கன்னியம்மா..’ என்கிற பாடலைப் பாடிக்கொண்டு, வண்டிக்கு முன்னால் உள்ள `கோஸ் பெட்டி’ என்கிற வண்டி ஓட்டுநர் அமரும் இடத்தில் உட்கார்ந்து, வளைந்து நெளிந்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு வந்தேன். வண்டி ஓட்டுபவருக்கு எரிச்சலும் கோபமும் வந்தது.