

நான் முதன் முதலாக ஒரு தேர்தலில் வாக்களித்தது என்னுடைய பத்தொன்பதாவது வயதில். அது நகர்மன்றத்துக்கு நடந்த தேர்தல். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க 18 வயது போதும். ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்களிக்க 21 வயதாக வேண்டும். ராஜீவ்காந்தி அரசால், 61வது அரசமைப்பு சட்டத் திருத்தப்படி 1989 மார்ச் முதல் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப் பட்டது.
ஆனால், நாங்களெல்லாம் பத்து வயதிலிருந்தாவது தேர்தலோடு ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்போம். எனக்கு ஏழு வயது. மத்தியானம் சாப்பிட்டு வேலையெல்லாம் முடிந்த பிறகு, அவசரமேயின்றி சர்வ அலங் காரங்களுடன் அம்மா, அக்கா, பக்கத்து
வீட்டு உறவுப் பெண்கள் சிலர் நெருக்கியடித்து உட்கார்ந்து கொண்டிருந்த ஸ்டாண்டர்ட் 10 காரில், நானும் வரு வேன் என்று திணித்துக்கொண்டு ஓட்டுச்சாவடிக்குப் போனேன். அப்போதெல்லாம் அபேட்சகர்களின் (வேட்பாளர்கள்) காரில், மாட்டு வண்டியில், குதிரை வண்டியில் எல்லாம் `பூத்’ வரை போய் வாக்களிக்கலாம்.