Published : 21 Jun 2025 06:28 PM
Last Updated : 21 Jun 2025 06:28 PM
கோடைக்காலம் என்றால் நினைவுக்கு வரும் சில விஷயங்களில் மாம்பழத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா, இமாம் பசந்த் போன்று பல்வேறு வகையான மாம்பழங்கள் இந்தியாவில் விரும்பி உண்ணப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் அதிகம் விரும்பப்படும் இந்த மாம்பழங்களை வைத்து உணவுத் திருவிழா ஒன்றில் புதுமைகளைப் புகுத்தி இருக்கிறார் பிரபல சமையல் கலைஞரும் உணவு சார்ந்த பயணம், வரலாற்றை ஆவணப்படுத்திவருபவருமான ராகேஷ் ரகுநாதன்.
ஆம்ரா - உணவுத் திருவிழா: பொதுவாக மாம்பழத்தைப் பயன்படுத்தி குழம்பு வகைகள், மில்க் ஷேக், ஐஸ் கிரீம் போன்ற உணவுகளைச் சமைக்கலாம். ஆனால் சாலட், ’மாக்டெயில்’ தொடங்கி மாம்பழ பிளாட்டர், மாம்பழ டிக்கா வரை பல்வேறு உணவு வகைகளில் மாம்பழத்தைச் சேர்த்து புது மெனுவை உருவாக்கி உள்ளார் ராகேஷ். ’ஆம்ரா’ எனும் உணவுத் திருவிழாவில் சுவைக்க சுமார் 15 மாம்பழ உணவு வகைகளை அவர் தயாரித்துள்ளார்.
இறால் டாக்கோஸ் மாம்பழ சல்சா, மாம்பழ சில்லி சிக்கன் போன்ற அசைவ உணவுகளும், மாம்பழ மேஹெம், ஜோத்பூர் மாம்பழ சப்ஜி போன்ற சைவ உணவுகளும் இந்த உணவுத் திருவிழாவில் ஆச்சரியப்படுத்தின. ஜூஸ், கார, இனிப்பு வகைகள் என ஒவ்வொரு உணவுக்கும் ஏற்ப மாம்பழ வகைகளைத் தேர்ந்தெடுத்து மெனு தயாரிக்கப்பட்டுள்ளது. சைவ, அசைவ உணவுகள் இரண்டோடும் மாம்பழத்தின் சுவை ஒத்துப்போவது சுவைப்பவருக்குப் புதுவித அனுபவத்தைத் தரும்.
இந்திய பழங்களின் வரலாற்றில் சிறப்புமிக்க ஒரு பழமாகவும், ‘பழங்களின் ராஜா’ என்றும் அழைக்கப்படும் மாம்பழங்களை மையமாகக் கொண்டு உணவுகளைத் திட்டமிட்டிருக்கும் ராகேஷ் இந்த உணவுத் திருவிழா மாம்பழங்களின் கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.
மாம்பழங்களை விரும்பி சாப்பிடுபவர் இந்த சீசன் முடிவதற்குள் புதுமையான மாம்பழ உணவு வகைகளை வீட்டிலும் சமைத்துப் பார்க்கலாம். தற்போது நடைபெற்றுவரும் ஆம்ரா - மாம்பழ உணவுத் திருவிழா சென்னை ராயப்பேட்டை அமேதிஸ்ட்டில் உள்ள ஒயில்ட் கார்டன் கஃபே உணவகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT