

நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் பரவாத அந்தக் காலத்தில் கடிதப் போக்குவரத்தே மக்களிடையே தகவல்களைப் பரிமாறும் முக்கியப் பணியைச் செய்துவந்தது. சைக்கிளில் கடிதங்களைச் சுமந்துகொண்டு செல்லும் தபால்காரர்கள், ஹீரோக்களாகப் பார்க்கப்பட்டனர். வெயிலில் வரும் தபால்காரருக்குத் தண்ணீர், மோர் என்று கொடுத்து உபசரிப்பார்கள். ஏதாவது தகவலை எதிர்பார்த்து இருப்பவர்கள், தினமும் தபால்காரர் வரும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
கடிதங்களைப் பிரித்து, சிலாகித்துப் படிப்பதே தனி சுகம்தான். பிறப்பு, இறப்பு, பெண் பார்க்கும் படலம் போன்ற அனைத்துத் தகவல்களையும் கடிதங்களே சுமந்துவரும். பெண் பார்த்துவிட்டுச் செல்பவர்கள், ’போய் லெட்டர் போடுகிறோம்’ என்று சொல்வது தவிர்க்கமுடியாத வாக்கியமாக அன்று இருந்தது.