

பொதுவாக, திருநெல்வேலியில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்துவ தென்றால் டவுன் காந்தி சதுக்கம் பகுதியையே அரசியல் கட்சியினர் விரும்புவார்கள். அங்கே மக்கள் புழக்கம் அதிகம். விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தி பேசிய இடம் அது என்பார்கள். பொதுவாக, ஆள்பவருக்கு எதிரான பேச்சைக் கேட்ப தற்கே மக்கள் அதிகமும் விரும்புவார்கள். ஏனென்றால் ஆட்சியில் இருப்பவர் மீது ஆட்சி சார்ந்து பெரும்பாலோருக்கு ஓர் ஒவ்வாமை வந்துவிடும். இதை incumbency syndrome என்று அழைப்பார்கள். எங்கள் பதின் வயதில் எல்லாரையும்போல அப்போது எதிர்க் கட்சியினைச் சேர்ந்த அண்ணா, கலைஞர் பேச்சுகள் மீது ஈர்ப்பு இருந்ததில் வியப்பில்லை.
1960களில் வட்டத்திற்கு வட்டம் அரசியல் கூட்டம் நடைபெறும். அதில் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பேச்சாளர்கள் பேசுவார்கள். அவர்கள் குறைந்த ஊதியமாக, 50 ரூபாயே பெற்றுக் கொள்வார்கள். அதிலும் ஓர் ஊரில் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டங்கள் ஏற்பாடு செய்தால் இன்னும் குறைவாகவே பெற்றுக்கொள்வார்கள்.