

சமையலின் ஓர் அங்கம் புளி. புளியமரங்களுக்கு ஓர் ஆண்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் போதும். அதன் பிறகு ஆண்டுக் கணக்கில் வாழும். இதனால் முதல் ஆண்டு மட்டும் அருகில் இருக்கும் தோட்டங்கள், குளங்களில் இருந்து தண்ணீரைப் பெற்று, ஊற்றி வளர்ப்பார்கள். வறட்சியை நன்கு தாங்கும். புளியமரத்தின் சிறு கம்பைப் ‘புளிய விளார்’ என்பார்கள்.
தோட்டத்தில் கிணறு வைத்திருந்தவர்கள் பல்வேறு பயிர்களை விளைவிப்பார்கள். கிணறு இல்லாத நிலம் வைத்திருப்பவர்கள் வறட்சியைத் தாங்கக்கூடிய புளியமரங்களைத் தங்கள் விளைகளில் வைத்தார்கள். மழைத் தண்ணீர் பூமிக்குள் இறங்கி, மரங்களுக்குப் பலன் கொடுக்கும் என்பதால், மழைக்காலத்தில் மண்ணை உழுது, பயறுகளை விதைப்பார்கள். புளி பழுத்த பின் குடும்பமே புளி உலுப்பப் புறப்பட்டுவிடும்.