

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘ஆனைவிழுந்தான் கேணி’ என்றோர் ஊர் இருக்கிறது. இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டமாக இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்பட்ட வல்லம் எனும் ஊருக்கு மிக அருகில் உள்ளது. ‘ஆனைவிழுந்தான் கேணி’ என்றும் ‘ஆனைவிழுந்தான் பள்ளம்’ என்றும் ‘ஆனைநகர்’ என்றும் இந்த ஊரை மக்கள் அழைத்து வருகிறார்கள். அது என்ன ஆனைவிழுந்தான் பள்ளம்? ஒரு காலத்தில் இங்கே பெரும் பள்ளம் இருந்ததாகவும் அதற்குள் ஒரு யானை விழுந்துவிட்டதாகவும் அதிலிருந்து இந்த ஊர் ‘ஆனை விழுந்தான் பள்ளம்’ என்று பெயர் பெற்றதாகவும் சொன்னார்கள்.
ஆனைவிழுந்தான் குறித்துத் தேடலில் இறங்கியபோது, இலங்கையில் ‘ஆனைவிழுந்தான் காணி’ என்கிற பெயரில் ஓர் ஊர் இருப்பது தெரியவந்தது. இந்த ஊர் ஒரு காலத்தில் பெருங்காடாக இருந்திருக்கிறது. அந்தக் காட்டிற்குள் யானைகள் இருந்திருக்கின்றன. அந்த யானைகளை விரட்டி வந்து தாழ்வான பள்ளத்தில் இறக்கி, அதன் சினத்தை அடக்கி, மனிதப் பயன்பாட்டிற்கு உதவும்படியாகப் பழக்கும் இடத்திற்கு ‘ஆனைவிழுந்தான்’ என்று பெயர். காணி என்பது நிலம்.