

திருநெல்வேலியில் ஆனித் திருவிழாவையொட்டி நகராட்சி சார்பில் பொருள்காட்சி நடக்கும். பொருள்காட்சிக்கென்று தனிமைதானம் கிடையாது. நகராட்சி அலுவலகத்திற்கு எதிரான வயல் வெளிகள்தான் மைதானம். ஏனைய வயல்களில் நெல் நட்டு விட்டாலும் அந்த வயல்களில் தண்ணீர் வரத்தை நிறுத்தி பயிர் ஏற்றாமல் போட்டுவிடுவார்கள்.
நடப்பதற்கு வசதியாக வயல் வரப்பு களை எல்லாம் தட்டி நிரத்தி, பெரிய மைதானமாக்கி விடுவார்கள். அப்படியும் ஓரிரண்டு நாள்கள், நன்றாகச் சமப்பட்டிராத நிலத்தில் நடப்பதற்குச் சிரமமாகவே இருக்கும். என் அப்பா முதல் இரண்டு, மூன்று நாள்களுக்குப் போகவே மாட்டார், கரம்பைக் கட்டி கட்டியாகக் கிடக்கும், காலை அறுத்துவிடும் என்பார்.