

மாட்சிமை என்கிற சொல்லின் மூலம் மாண், மாண்பு என்பதாக இருக்கிறது. மாட்சி என்கிற சொல்லை திருவள்ளுவர் 3 அதிகாரங்களில் படை மாட்சி, பகை மாட்சி, இறை மாட்சி என்று பயன்படுத்தியுள்ளர். மாட்சி என்பதற்குப் பெருமை, மேன்மை, மகிமை, அழகு என்று பொருள். சிலப்பதிகாரம் ‘மாட்சிமையுடையார் கொடுக்கு மரபுபோல’ என்பதாகப் பாடியுள்ளது. திருவள்ளுவர் பயன்படுத்திய மாட்சி என்கிற சொல்தான் இங்கு மாட்சிமை என்று பண்புச் சொல்லாகியிருக்கிறது.
மாட்சிமை தங்கிய மதுரை: 1907ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பு ஆர்.ஸ்ரீநிவாஸ ராகவ ஐயங்கார் ’மஹோபந்நியாசம்’ எனும் நூலைத் தமிழுக்கு மொழிபெயர்த்தார். இந்த நூல் பரோடா சமஸ்தானாதிபதிகளாகிய மாட்சிமை தங்கிய கைக்வார் மஹாராஜா கல்கத்தாவில் நடந்த இந்தியக் கைத்தொழிற்சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தில் செய்தருளியது என்கிற குறிப்பாக இந்நூல் வெளியானது.