

எப்போதுமே ஒரு புதிய ஊருக்குப் பணிமாறுதலாகி, அந்த ஊரில் சேரும்போது இங்கு எவ்வளவு நாள்களோ என்றுதான் தோன்றும். ஆனாலும் சேரும் முன்பு புதிய ஊர், மக்கள், வாடிக்கையாளர்கள், அலுவலகப் பணிகள், தண்ணீர் வசதி, பக்கத்தில் என்னென்ன ஊர்கள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள், தியேட்டர்கள் பற்றியெல்லாம் தகவல்கள் சேகரிப்பதும் நடக்கும். இப்போது மாறுதல் கிடைத்திருக்கும் அந்த ஊரைப் பற்றி எல்லாமே நல்லவிதமாகவே சொன்னார்கள்.
முதல் நாள் சீக்கிரமாகவே பேருந்து கிடைத்து, ரொம்பச் சீக்கிரமாகவே போய் இறங்கிவிட்டேன். இறங்கியதும் என்னைச் சற்றே ஒட்டியபடி ஒருவர் வந்து காதருகே, “கடலை வேணுமா” என்று கேட்டார். அந்தச் சின்ன பஸ் ஸ்டாண்டில் பலரும் அதை வேடிக்கை பார்ப்பதுபோலிருந்தது. ஆரம்பமே ஒரு மாதிரியா இருக்கே! கடலை என்பதற்கு வேறு அர்த்தம் உண்டோ என்றெல்லாம் நினைத்துச் சற்றுக் கலவரமானேன்.