

‘உங்க வீட்டுக்கு விருந்தாள் வந்திருக்காங்கடே’ என்று விளையாட்டுக்கு நடுவே யாராவது சொல்வார்கள். விளையாட்டுக்கு ‘ரெஸ்ட்’ சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடுவோம். பாதி விளையாட்டில் ‘ரெஸ்ட்’ அல்லது `தூரி’ சொல்லிவிட்டுப் போவதற்குப் பல விதிகள் உண்டு.
தொட்டுப்பிடித்து விளையாட்டு என்றால் முதல் விதி நாம் தொட்டு வருபவராக இருக்கக் கூடாது. பம்பரக்குத்து என்றால் நம் பம்பரம் வட்டத்துக்குள் இருப்பவராக, கோலிக்காய் விளையாட்டு என்றால் கோலிக்காய் `பேந்தா’ கட்டத்துக்குள்ளே இருக்கக் கூடாது. அப்படியே தூரி சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால், தோற்றுப் போனால் என்ன பந்தயம் அல்லது தண்டனை என்று பேசினோமோ அதை அப்போதே செய்துவிட்டுப் போக வேண்டும்.