

அவர் பக்கத்துக் கிராமத்தில் கோயிலில் வேலை பார்க்கிறவர். கோயில் மடைப்பள்ளியில் பிரசாதம் போடுகிற வேலை. அது சின்ன கோயில், ஒரு நேரப் பூசைதான் இருக்கும்போல. காலையில் வேலை முடிந்ததும் கொஞ்சமாக வடை, பஜ்ஜி, போண்டா என்று போட்டுப் பெரிய தாம்பாளத்தில் வைத்து, தாம்பாளத்தைச் சாமிக்கு உடுத்துவது போல பெரிய பரிவட்டம் ஒன்றால் மூடி தலையில் வைத்து எடுத்து வருவார். தாம்பாளம் என்றால் `பெரிய்ய’ தட்டு. டவுன் பஸ்ஸில் வந்து, நான்கு பஜாரிலும் அதை ஒட்டிய நான்கைந்து தெருக்களில் மட்டுமே விற்பார்.
அதற்கே உச்சி வெயிலாகிவிடும். அவரைப் பார்க்கையில் எந்தக் காலத்திலோ பார்த்த கிருஷ்ணலீலா திரைப்படத்தில் தலையில் கிருஷ்ணரை வைத்துக் கொண்டு பெருமழையில் வருகிற வாசுதேவர்போல இருக்கும். ஆள் அத்தனை ஒல்லியாகச் சிறையில் வாடுபவர்போல இருப்பார். நெற்றியில் திருமண் இட்டிருப்பார். அவரின் தாம்பாளம்தான் குடை பிடிக்கிற ஐந்து தலை நாகம். அடிக்கிற வெயில்தான் மழை.