

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டைக்கு அருகில் இருக்கிறது ‘மோக னூர்.’ இதே பெயரில் நாமக்கல் மாவட்டத்திலும் ஓர் ஊர் இருக்கிறது. இது நாமக்கல் கவிஞர் வெ.இராம லிங்கனார் பிறந்த ஊர். மோகனூர் வேளாண்மைக்கு உகந்த ஊராக இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமை. நெல், சோளம், கரும்பு என்று தினைப் பயிர்களும் பணப்பயிர்களும் நன்கு விளையும் மருதநிலமாக இருந்தது. நெல் நன்கு செழித்து வளர்வதற்கு உகந்த வண்டல் மண் கொண்ட ஊர்.
நெற்கதிரடிக்கும் போர்க்களத்தை முன்னோர் ‘முகவை’ என்று அழைத்தார்கள். முகவை என்கிற சொல் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. முகவை என்பதற்கு அள்ளுதல், நெற்பொலி என்று பெயர். மேலும் முகவை என்பது தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது. முகவை மாவட்டம் என்பது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகிலுள்ள ராமநாதபுரத்தைக் குறிக்கும்.