

மூத்த எழுத்தாளர்களுடன் பேசிக்கொண்டிருப்பது ஓர் இனிமையான அனுபவம். அவர்கள் எழுத்தால் கவரப்பட்டு, ஊர் ஊராகச் சென்று அவர்களைத் தேடிப்போவதும், பேசிக்கொண்டிருப்பதும் தொலைத் தொடர்பு வசதி குறைவாயிருந்த 1970களில் எங்களுக்குப் பிடித்தமான விஷயம். நாகர்கோவில் போய் சுந்தர ராமசாமியைப் பார்ப்பதும், இடைசெவல் போய் கி.ராஜநாராயணனைப் பார்ப்பதும், திருவனந்தபுரம் சென்று நகுலனைப் பார்ப்பதும், ராஜவல்லிபுரம் சென்று வல்லிக்கண்ணனைப் பார்ப்பதும் அவ்வளவு பிடித்தமான செயல். அவர்களும் அரவணைப்புடன் நடந்துகொள்வார்கள்.
அவர்கள் எழுத்தைப் பற்றித்தான் என்றில்லை. இலக்கியம்தான் என்றில்லை. என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் அவர்கள் பேச நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம். அவர்களிடம் கற்றது எவ்வளவோ உண்டு. அநேகமான பொழுதுகளில் வண்ணதாசன் உடன் வருவார். உண்மையில் அவர்தான் என்னை அழைத்துச் செல்வார். அந்தக் காலக்கட்டத்தில் பா.செயப்பிரகாசமும் நெல்லையில்தான் இருந்தார். அவரும் எங்களுடன் இடைசெவல் வருவார். அவருக்கு அவரது கரிசல் பூமிக்குப் போவதென்றால் தாய் வீடு செல்வதுபோலக் கொள்ளைப் பிரியம். அதனால் அங்கே அடிக்கடி போவோம். கி.ரா, சு.ராவுடன் பேசிக்கொண்டிருக்க யாருக்குத்தான் பிடிக்காது!