லிஃப்ட் கொடுக்கலாமா? | பாற்கடல் 3

லிஃப்ட் கொடுக்கலாமா? | பாற்கடல் 3
Updated on
2 min read

அது ஓர் அரசு உதவி பெறும் கிராமப் புறப் பள்ளி. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு மாலையில் இருக்கும். அதை முடித்துச் செல்லும் சில மாணவர்களின் வீடுகள் குறிப்பிட்ட பேருந்துகளே நிற்கும் இடத்தில் இருக்கும். அதனால், மாணவர்கள் யாராவது இரண்டு சக்கர வண்டியில் செல்பவர்களிடம் லிஃப்ட் கேட்டு ஏறிக்கொள்வார்கள்.

மாணவர்கள் என்பதால் பெரும் பாலும் ஏற்றிக்கொள்வார்கள். சிலர், ‘ரெண்டு பேர் நிக்கிறீங்க, எப்படி ஒருத்தரை மட்டும் ஏற்றுவது’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். இதனால் மாணவர்கள் தள்ளித் தள்ளி நின்றுகொள்வார்கள். புத்தர் சொன்னது போல, ‘மனிதர்களின் சுபாவமே அப்படித்தான். கொடுமையான வெப்பத்திற்கிடையேயும் எப்படியாவது குளிர்ந்த இடத்தைத் தேடிக்கொள்ளும்.’

அப்போதெல்லாம் எங்கள் ஊரில் மின்கட்டணம் செலுத்த வேண்டு மென்றால் மின்வாரிய மத்திய அலுவலகம் செல்ல வேண்டும். அது ஊரை விட்டுத் தள்ளி இருக்கும். பேருந்தில் செல்லும் தூரமும் இல்லை, நடக்கும் தொலைவும் இல்லை. அதனால் பெரும்பாலும் அங்கு போவதற்கோ வருவதற்கோ லிஃப்ட் கேட்பார்கள். சிலர் ஒன்றிரண்டு ரூபாயும் தரத் தயாராக இருப்பார்கள்.

நான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். காரில் வந்த ஒருவர், ஏறிக் கொள்ளுங்கள் என்றார். என்னுடன் கல்லூரி செல்லும் பலரும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்களே தவிர, காரில் ஏறவில்லை. நான் மட்டும் ஏறிக்கொண்டேன். இடம் வந்ததும் நன்றி சொல்லிவிட்டு இறங்கினேன். அவர், “பஸ் கட்டணத்தைத் தாருங்கள்” என்றார். அப்போதுதான் மற்றவர்கள் சிரித்ததன் காரணம் புரிந்தது. காசைக் கொடுத்துவிட்டு இறங்கினேன்.

லிஃப்ட் தருவதில் அபாயமும் இருக்கிறது. நான் உறுப்பினராக இருக்கும் குற்றாலம் மத்திய ரோட்டரி கூட்டம் சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் கைகாட்டி லிஃப்ட் கேட்டார். நான் செல்ல வேண்டிய இடத்துக்குதான் அவரும் போக வேண்டும். ஏற்றிக் கொண்டேன். பாதி தூரத்தில் போலீஸ் ரோந்து வாகனத்திலிருந்து மறித்தார்கள். விவரம் சொன்னேன். பின்னால் இருப்பவர் யார் என்று கேட்டார்கள். தெரியாது என்றேன்.

``என்ன சார் சொல்லறீங்க, யாருன்னே தெரியாமலே ஏத்திட்டு வரீங்களா?” என்று ஒரு கான்ஸ்டபிளிடம் கண்ணைக் காண்பித்தார் ஆய்வாளர். அவர் அந்தப் புது நபரைத் தனியாக அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “நீங்க பணம் வச்சிருக்கீங்களா?” என்றார். என்னிடம் ஐநூறு ரூபாய் இருக்கும் என்றேன். “செயின், மோதிரமெல்லாம் போட்ருக்கீங் களா” என்று கண்களாலேயே அளந்தார். ``மோதிரம் மூன்று கிராம் இருக்கும்” என்றேன். ``அது போறாதா? இரண்டாயிரம் ரூபாய் ஆச்சே, அதையும் பிடுங்கிக் கொண்டு வண்டியையும் பறித்துக் கொண்டால் என்ன செய்வீங்க” என்று கேட்டார்.

அதற்குள் கான்ஸ்டபிள், கை நிறையப் பணத்துடன் வந்தார். ``சார், இடுப் பைச் சுத்தி நாலு லட்ச ரூபாய் வச்சிருக்கார். கேரளாக் காரராட்டம் இருக்கு. மாட்டுச் சந்தைக்கு மாடு பிடிக்க வந்தேங் கிறாரு” என்றதும், ஆய்வாளர் குரலே மாறி விட்டது. “பாத்தீங்களா மிஸ்டர், இதுவே அவர் கஞ்சாவோ போதைப் பொருளோ வச்சிருந்தா, ரெண்டு பேரையும் உள்ளே வச்சிருப்பேன்” என்றார். கோபத்துடன் லைசன்ஸைக் கேட்டார். பார்த்துவிட்டு, “நீங்க வீட்டுக்குப் போங்க” என்றார். தப்பித்தேன் பிழைத்தேன் என்று வீடு வந்தேன்.

ஆதிகாலத்தில் இப்படி லிஃப்ட் கொடுத்து மாட்டிக் கொண்டவன் சிந்துபாத். புயலில் சிக்கி ஒரு தீவில் ஒதுங்கினான். காடு மேடெல்லாம் அலைந்து வெள்ளம் சுழித்தோடும் ஆற்றங்கரைக்கு வந்தான். கரையில் ஒரு கிழவர் நடக்க முடியாமல் உட்கார்ந்திருந்தார். இளகிய மனம் கொண்ட சிந்துபாத், அவரை மறுகரைக்குப் போக வேண்டுமா என்று கேட்டான். தலையை ஆட்டினார். அவரைத் தோளில் ஏற்றிக்கொண்டு ஆற்றைக்கடந்தான். கீழே இறங்கச் சொல்லும் போது, அவரோ உடும்பு போல கழுத்தை இறுக்கிக்கொண்டு இறங்க மறுக்கிறார். அப்போதுதான் புரிகிறது, அது அவ்வளவு சுலபமல்ல என்று.

அவரையும் சுமந்துகொண்டே தீவில் சுற்ற வேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டவன், தந்திரமாக ஒரு சுரைக் குடுவையில் திராட்சை களைப் பறித்துப் புளிப்பதற்காக ஒரு கொடியில் மாட்டிவிட்டான். திராட்சை மதுவாக நொதிக்கும் வரை சுமந்துகொண்டே திரிந்தவன், ஒருநாள் அந்த மதுவைக் கொடுத்துக் கிழவரை மயங்க வைத்து விட்டுத் தப்பித்தான். நீங்கள் சொல்லுங்கள், லிஃப்ட் தருவது நல்லதா, கெட்டதா?

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in