

ஓர் ஆங்கில இதழ் அறிவித் திருந்த ஒளிப்படப் போட்டியில் நண்பருக்குப் பரிசு அறிவிக்கப் பட்டிருந்தது. வாழ்த்துவதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றேன். விருதுச் சிற்பத்தைக் காட்டினார் நண்பர். ஓர் அடி உயரத்துக்குக் கரிய வண்ணம் பூசப்பட்ட கலைவாணியின் சிற்பம் அழகாக இருந்தது. “இதைச் சாமி அறையிலயே வைக்கலாம்” என்றேன்.
கசந்த புன்னகையுடன், “பார்க்கலாம்” என்றார். “என்ன பார்க்கலாம்?” “இந்த வெற்றிகளுக்கு ஒரு அர்த்த மும் இல்லை. இந்த உலகத்துக்குச் செஞ்சுக் காட்ட வேண்டிய ஒரு விஷயத்துல தொடர்ச்சியா தோத்துக் கிட்டே இருக்கேன்.” “பொண்ணு கல்யாண விஷயம் தானே? நடக்கற காலத்துல தானா நடக்கும்.” “உலகத்துல யார் யாருக்கோ நடக்குது. நமக்குத்தான் நடக்க மாட்டேங்குது. வாங்க, நடந்துட்டு வரலாம்.”
அவருக்கு ஒரே மகள். மென் பொருள் நிறுவனத்தில் உயர்பதவி வகிப்பவர். முப்பத்தைந்து வயது. அவர் தனக்குப் பொருத்தமான துணை யைத் தானே தேடிக்கொள்ளலாம் எனும் சுதந்திரத்தையும் நண்பர் அளித்திருந்தார். ஆனால், அந்தப் பெண்ணுக்குக் காதல் சாத்தியப்படவில்லை. அவ ராகவே இணையதளங்கள் வழியாகக் கண்டறிந்து தேர்வுசெய்யும் ஆண்கள், அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். உறவினர்கள், நண்பர்கள் வழியாகத் தேடிவருகிற தொடர்புகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“போன மாசம் ஒரு நல்ல சம்பந்தம் வந்தது. இவளை மாதிரியே நல்ல பொசிஷன்ல இருக்கறவன். இந்த ஊருலயே இருக்கான். இதுக்கு மேல என்ன வேணும்? ஒரு மாசமா புடி கொடுக்காமலே பேசிட்டிருந்தா. மாப்பிள்ளை வீட்டிலிருந்து தெனமும் கேட்டுக்கிட்டே இருந்தாங்க.
ஒரு வழியா ஓட்டல்ல பேசலாங்கற ஏற்பாட்டுக்கு ஒத்துக்கிட்டா.” “பேசி முடிக்க வேண்டியதுதானே?” “அந்தப் பையன்கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தா. ரெண்டு பேருமே நம்பர் வாங்கிக்கிட்டாங்க. ஒரு பத்து நாள் பேசிப் பார்த்துட்டுச் சொல்றேன்னு சொன்னா. இதோ, ஒரு மாசமே முடியப் போகுது. ஒரு பதிலும் சொல்லலை.”
“ஐயோ, அப்புறம்?” “இப்படி இருந்தா எப்படிம்மான்னு அவங்கம்மா நேத்து கேட்டாங்க. என்ன பேசினாலும் சரியா கனெக்ட்டாக மாட்டறாம்மா, வேணாம்மா. வேற யாரையாவது பார்க்கலாம்னு சொல்லிட்டுப் போயிட்டா.” நாங்கள் நடந்துகொண்டிருந்த தெருவில் இரண்டு பக்கங்களிலும் உயரமான அடுக்ககங்கள் நின்றிருந்தன.
சிலவற்றில் கட்டுமான வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரு மரத்தடியில் ஓர் ஆணும் பெண்ணும் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அந்த இளைஞர் வடநாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
அவர் அந்தப் பெண்ணோடு நெருக்கமாகப் பல கோணங்களில் நின்று செல்ஃபி எடுத்தார். ஆனால், சலிப்போடு உதட்டைப் பிதுக்கினார். நண்பரின் முகம் சட்டெனக் கனிந்தது. “என்ன தம்பி, செல்ஃபி சரியா வரலையா?” என்று கேட்டார். ‘ஆமாம்’ என்பதுபோல தலையசைத்தனர். “நான் எடுக்கறேன்” என்று கையை நீட்டினார். அந்தப் பெண் திறன்பேசியை அவரிடம் கொடுத்தார்.
“புது ஜோடியாம்மா?” “கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஓடிடுச்சி.” “புது ஜோடி மாதிரியே இருக்கீங்க!” இருவரும் வெட்கத்தோடு ஒருவரை இன்னொருவர் பார்த்தபடி சிரித்தார்கள். “இந்த அபார்ட்மெண்ட் கட்டும்போது இங்கதான் வேலை செஞ்சிட்டிருந்தேன். இவரும் அப்பதான் பீகார்லயிருந்து இங்க வந்து வேலை செஞ்சாரு. ரெண்டு வருஷம் பழகிப் புரிஞ்சிக்கிட்டோம். பில்டிங் முடியற நேரத்துல வீட்டுல கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க.”
அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவர்களை வெவ்வேறு கோணங்களில் நிற்க வைத்தார் நண்பர். “என் பக்கமா பார்க்கக் கூடாது. நீ அவனைப் பாரு. அவன் உன்னைப் பார்க்கட்டும். இல் லைன்னா ரெண்டு பேருமா சேர்ந்து வேற எங்கயாவது பாருங்க. அப்பதான் படம் நல்லா வரும்” என்றார். அவர் சொன்ன விதமாக அவர்கள் நிற்க, அவர் படம் எடுத்தபடி இருந்தார்.
“தேங்க்ஸ் அங்கிள்” என்று திறன்பேசியைப் பெற்றுக்கொண்டார் அந்தப் பெண். “காட் ப்ளெஸ் யு” என்று வாழ்த்தினார் நண்பர். இருவரும் படங்களை நகர்த்திப் பார்த்துப் பரவசத்தில் திளைத்திருக்க, நாங்கள் நடக்கத் தொடங்கினோம்.
(நிறைந்தது)
- writerpaavannan2015@gmail.com