

வள்ளியைப் பார்க்கும்போதெல்லாம், “நீ சமையல்கட்டுக்கு உள்ள போறதும் தெரியல, வெளிய வரதும் தெரியல. எக்ஸ்பிரஸ் வேகத்துல எல்லாத்தையும் எப்படிம்மா கச்சிதமா முடிச்சிடற?” என்று கேட்பார் பரமசிவம். “இந்த ஊரு அன்ன பூரணிம்மா நீ” என்று பாராட்டுவார் சொக்கலிங்கம். “அஞ்சு பேருக்கும் சமைப்பா. அம்பது பேருக்கும் சமைப்பா. அவள் சமையல் எப்பவும் நளபாகம்” என்று பெருமையோடு பேசுவார் முத்தம்மா ஆயா.
சுப்பிரமணியைத் திருமணம் செய்துகொண்டு ஊருக்கு வந்த புதிதில் எல்லாப் பெண்களையும் போல வள்ளியும் தன் வீடு, தன் வாசல் என்றுதான் இருந்தார். ஆனால் ஒரு வேலை செய்து பத்து ரூபாய் சம்பாதித்தால், அதன் கடைசிச் சில்லறையைச் செலவு செய்து முடிக்கும் வரைக்கும் அடுத்த வேலைக்குப் போகும் வேகமோ விருப்பமோ கணவரிடம் இல்லை என்பதை இரண்டு மாதங்களிலேயே புரிந்துகொண்டார். அந்த அறிவு அவரைச் சுயமாகச் சம்பாதிப்பதற்கு வழி தேடவைத்தது.
புதிய வழிகள்: களையெடுக்கவும் நாற்று நடவும் கதிரறுக்கவும் அந்தத் தெருவிலிருந்து செல்லும் பெண்கள் கூட்டம் வள்ளிக்கு வழிகாட்டியது. இருபத்தைந்து ஆண்டு கால இல்லற வாழ்க்கையைக் கசப்பில்லாமல் கடந்து வர அந்த வருமானமே அவருக்கு உற்ற துணையாக இருந்தது. வள்ளி பெற்ற மூன்று பெண்களும் அடுத்தடுத்து ஆளாகி நின்றனர். அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பை தன் தோளில் சுமந்தார். அவர் ஈட்டிவந்த வருமானம் போதுமானதாக இல்லை.
அந்த நேரத்தில் சமையல் வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார் பரமசிவம். வள்ளி அந்த வேலையைத் தானே செய்வதாகச் சொன்னார். நான்கு மாதங்களில் அவருடைய மனைவி உடல்நலம் தேறிய பிறகும்கூட, சமையல் பொறுப்பு வள்ளியிடமே நீடித்தது. வள்ளியின் கைப்பக்குவமும் ருசியும் அப்படி! அவரைத் தொடர்ந்து மளிகை ஸ்டோர் சொக்கலிங்கம் மாமா தன் குடும்பத்துக்கு இரவுச் சிற்றுண்டியைத் தயாரித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நான்கு அரசு ஊழியர்கள் தங்கியிருந்தார்கள். அவர்களுக்குரிய சாப்பாட்டை வீட்டிலேயே சமைத்துக் கொடுக்க ஒப்புக்கொண்டார் வள்ளி. அதிகாலையில் எழும் நேரம் முதலில் ஆறிலிருந்து ஐந்துக்கு மாறி, பிறகு நான்காக ஆகிவிட்டது. அந்தத் தெருவின் முனையில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. மாதத்துக்கு ஒருமுறை வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று ஐம்பது பேருக்கு அன்ன தானத்துக்குச் சமைக்கும் பொறுப்பும் வள்ளியிடம் வந்தது.
சமையலுக்கு வள்ளி என்பது அந்தத் தெருவில் எழுதாத சட்டமாகிவிட்டது. பிறந்தநாள், நிச்சயதார்த்தம் என வீட்டுக்குள்ளேயே நடத்துகிற எல்லா விசேஷங்களிலும் சமையல் பொறுப்பு வள்ளியைத் தேடிவந்தது. ஒரு திருமணத்துக்கான தொகை சேர்ந்ததும், ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்த்து எளிய முறையில் திருமணம் செய்து கொடுத்தார்.
வளைகாப்பு: வள்ளியின் பக்கத்து வீட்டில் வசிக்கிறார் சுந்தரம். அவருடைய மகள் பத்மினியின் வளைகாப்புக்குச் சமையல் செய்வதற்காக வள்ளியைத் தேடிவந்தார். வள்ளி திண்ணையிலேயே சுருண்டு படுத்திருந்தார். அவர் பலமுறை சத்தமாகக் கூப்பிட்ட பிறகே, திடுக்கிட்டு எழுந்தார். “ஏதோ மயக்கமா இருந்தது. அப்படியே தூங்கிட்டிருக்கேன்” என்றார். “பத்மினி வளைகாப்பு தேதி குறிச்சாச்சு. விருந்துக்கு நீதான் பொறுப்பு” என்றார் சுந்தரம். “இதத்தான் எதிர்பார்த்திட்டிருந்தேன். கொண்டாடிலாம்ண்ணே” என்று சிரித்தார் வள்ளி.
வளைகாப்பு நெருங்கி வரும் நேரத்தில் அடிக்கடி வயிற்றுவலி வந்து துடித்தார் வள்ளி. மயக்கமும் பாடாய்ப் படுத்தியது. அவர் வீட்டுக்குப் பக்கத்தில்தான் அரசாங்க மருத்துவமனை இருந்தது. மருத்துவரைப் பார்த்தார். “சோதனை செஞ்சி பார்க்கணும். ஒருநாள் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குப் போயிட்டு வாங்க” என்றார் மருத்துவர்.
நாளைக்கு, நாளைக்கு என முண்டியம்பாக்கம் பயணத்தைத் தள்ளி வைத்தார் வள்ளி. பம்பரம் மாதிரி சமையல், சமையல் எனச் சுற்றிக்கொண்டே இருந்தார். ஒருநாள் என்ன வியாதி என்று தெரியாமலேயே அவர் ஆவி பிரிந்துவிட்டது. தெருவில் வசிப்பவர்களே இறுதி ஊர்வலத்தை நடத்தினார்கள்.
(அடுத்த இதழில் நிறைவடையும்)
- writerpaavannan2015@gmail.com