

கடற்கரை ஓரத்தில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் இயற்கையாக வளரும் தாவரம் ’ராவணன் மீசை’ என்கிற முள்ளிச் செடி. இது இயற்கை அரண். இதன் இலை கூர்மையான முள் போல இருப்பதால் விலங்குகள் இதை உண்ணாது. அன்றைய காலக்கட்டத்தில் பனைத் தொழில் நிறைந்த எங்கள் ஊரான வேம்பார் போன்ற கடற்கரை கிராமங்களில் முக்கியமான பொழுதுபோக்குத் திருவிழா ஆடி. தலை ஆடி, நடு ஆடி, கடைசி ஆடி என ஒரே மாதத்தில் மூன்று நாள்கள் கொண்டாடப்படும் பண்டிகையும் ஆடிதான். அன்று பனைத் தொழில் புரிவோர் இறைச்சி சமைத்து, கடற்கரைக்குக் கொண்டு சென்று சாப்பிடுவர்.
காலை பத்து மணிக்குக் கடற்கரைக்குப் போனாலும் சாப்பிடுவதற்கு ஒரு மணியாகிவிடும். அதுவரை சிறுவர்கள் கடலில் குளித்தும், முள்ளிப்பூ விளையாட்டு விளையாடியும் மகிழ்வார்கள். காய்ந்த முள்ளிப் பூவை உடைத்து காற்றின் திசையில் ஓடவிட்டு விரட்டிப் பிடிப்பது என்பது மகிழ்ச்சியின் உச்சம். இன்று பனைத் தொழிலும் குறைந்து விட்டது. கடற்கரைக்குச் சென்று விளை யாடுவதும் குறைந்துவிட்டது. கொஞ்சம் முளைக்கும் முள்ளியும் கூட மீனவர்களால் தீ வைத்து அழிக்கப்படுகிறது. ராவணன் மீசை போன்ற இயற்கை அரண்களை மீட்டெடுக்க வேண்டிய காலம் இது. - ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்